கரூர் மாவட்ட பெண்மணி அமுதவல்லியை சிறு தொழில் முதலாளியாக உயர்த்திய முதல்வர்

சென்னை: கரூர் மாவட்ட பெண்மணி அமுதவல்லியை சிறு தொழில் முதலாளியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் மாவட்டம், ஆண்டான் கோயிலை சேர்ந்தவர் கே.அமுதவல்லி. அவர் வீடுகளுக்கு பயன்படும், ஆடைகள் தயாரிக்கும் சிறு தொழிலில் ஈடுபட ஆர்வம் கொண்டிருந்தார். அந்த ஆர்வத்துடன், மாவட்ட தொழில் மையத்தை அணுகி தான் சுயமாக தொழில்புரிவதற்கு கடன் உதவிபுரியுமாறு கேட்டுக் கொண்டார்.

அமுதவல்லியின் தொழில் ஆர்வத்தின் அடிப்படையில், அவர் செய்ய விரும்பும் சிறு ஜவுளித் தொழிலை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் அவருக்கு உதவி செய்திட மாவட்ட தொழில் மையம் முன்வந்தது. அதன் பரிந்துரையுடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமுதவல்லிக்கு அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டத்தின்கீழ் 9 லட்சத்து 87 ஆயிரம் ரூபாயை தொழில் கடனாக வழங்கியது. அதில் 35 சதவிகித தொகை ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் அரசு மானியமாக அமுதவல்லிக்கு கிடைத்தது. மேலும், வங்கி கடன் தொகைக்குரிய வட்டியில் 6 சதவிகித வட்டித் தொகையையும் அரசு மானியமாக அவருக்கு அளித்தது.

இந்த கடன் உதவியோடு, அமுதவல்லி தன்னுடைய விருப்பப்படி, ஆடைகள் தயாரிக்கும் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டார். அதன்மூலம் அவருக்கு ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் அவர் தயாரித்த ஆடைகள் விற்பனையாயின. இதில் அவருக்கு 8 லட்சம் ரூபாய் லாபமாக கிடைத்தது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயல்படுத்தும் முதல்வரின் திட்டம் சாதாரண ஒரு பெண்மணியை புதிய தொழில் முகவராக மாற்றி சாதனை படைத்துள்ளது. மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தன்னை தொழில் முதலாளியாக உயர்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமுதவல்லி நன்றி கூறினார்.

Related posts

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு