கரூர் மாநகராட்சி பகுதிகளில் மக்களை மிரட்டும் தெரு நாய்கள்

*பெண்கள், குழந்தைகளுக்கு அச்சுறுத்தல்

கரூர் : கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டுக்கடங்காமல் சுற்றித்திரிவதால் பொதுமக்ள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். பெண்கள், குழந்தைகளை அச்சுறுத்துவதுடன் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதற்கும் காரணமாக இருக்கிறது.கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. ஆரம்பத்தில் கரூர் நகராட்சியுடன் தாந்தோணிமலை, இனாம் கரூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் சணப்பிரட்டி பஞ்சாயத்து ஆகியவற்றை இணைத்து ஒருங்கிணைந்த நகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நகராட்சியாக இருந்து கரூர் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் நடத்தப்பட்டு, 46 வார்டுகளில் திமுக கூட்டணியே வெற்றி பெற்று மேயர், துணை மேயர்கள் பதவி ஏற்று தற்போது மாநகராட்சி நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் முக்கிய மாநகராட்சிகளில் கரூர் மாநகராட்சியும் ஒன்றாக உள்ளது. மூன்று முக்கிய தொழில்களை கொண்ட நகரம் என்பதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கரூர் மாநகராட்சியை சுற்றிலும் உள்ள பகுதிகளில் குடியிருந்து தினமும் தொழில் நிறுவனங்களுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், அதில் முக்கிய பிரச்னையாக தெரு நாய்களின் தொந்தரவு அதிகளவு உள்ளது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, சணப்பிரட்டி, இனாம்கரூர், குளத்துப்பாளையம், பசுபதிபாளையம், காந்திகிராமம் போன்ற பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்கு சென்று இரவு நேரங்களில் வீடு திரும்புகின்றனர். பேரூந்தில் இறங்கி தங்கள் குடியிருப்புகளுக்கு நடந்து செல்லும்போது, தெருக்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தினமும் நாய் கடியால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் நிகழ்வுகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

ஆரம்ப காலங்களில் நாய்களை கட்டுப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, நாய்களை விரட்டி பிடித்து வேறு பகுதிகளுக்கு அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், தெரு நாய்களை பிடித்து அவைகளுக்கு குக செய்து திரும்பவும் விடும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த நிகழ்வுகளும் குறிப்பிட்ட மாதங்கள் வரை மட்டுமே நடத்தப்பட்டது. அதற்கு பிறகு தெரு நாய்கள் குறித்து யாரும் கண்டு கொள்ளாததால், தற்போது தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் உள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகளும், தொழிலாளர்களும், தெருக்களில் விளையாடும் சிறுவர், சிறுமிகளும் அவ்வப்போது தெரு நாய்களால் கடிபட்டு பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, தாந்தோணிமலை, ராயனூர் போன்ற பகுதிகளில் உள்ள தெருக்களில்தான் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக கண்டபடி சுற்றித் திரிகிறது. இதனால், பல்வேறு தொந்தரவுகளை மக்கள் தினமும் அனுபவித்து வருகின்றர். எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவைத்துள்ளனர்.

சிறுவனை கடித்த நாய்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் காந்திகிராமம் பகுதியில் காட்டுப்பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுவனை, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து குதறியதால், படுகாயமடைந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் அப்போது கரூர் மாவட்டம் முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த விசயத்தில் கூடுதல் கவனத்தை துறை அதிகாரிகள் செலுத்த வேண்டும்.

விபத்து ஏற்படுத்தும் நாய்கள்

பல்வேறு சாலை விபத்துக்களுக்கும் தெரு நாய்களின் குறுக்கீடும் ஒரு காரணமாக உள்ளது. கருர் மாநகர பகுதியின் முக்கிய சாலைகளான தாந்தோணிமலை, வெங்கமேடு, காந்திகிராமம், கோவைசாலை, வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலைகளில் சாலையின் மையத்தில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் இரண்டு சக்கர வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில், தடுப்புச் சுவர் ஏறி சாலையை விரைந்து கடக்க தெரு நாய்கள் முயலும் போது, குறுக்கே வரும் வாகனங்களில் மோதி, வாகன ஓட்டிகளும் அவ்வப்போது விபத்தில் சிக்கிக் கொள்ளும் நிகழ்வுகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, வாகன விபத்து, சிறுவர், சிறுமிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் போன்ற காரணங்களுக்கு முக்கியமானதாக உள்ள இந்த தெரு நாய்களை கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி