மகத்துவம் மிகுந்த கருங்குறுவை!

நமது பாரம்பரிய நெல் ரகங்களின் சிறப்புகள் குறித்தும், அவற்றை சாகுபடி செய்யும் முறை குறித்தும் வாரம்தோறும் கண்டு வருகிறோம். இந்த வாரம் கருங்குறுவை நெல் குறித்து காண்போம். கருங்குறுவை அரிசி நம் முன்னோர்களின் உணவில் முக்கியப் பங்கு வகித்தது. இந்த வகை நெற்பயிரை டிசம்பர் 15 – மார்ச் 14, ஜூன் 1 – ஆகஸ்ட் 31 வரையான காலங்களில் சாகுபடி செய்யலாம். அதாவது டிசம்பர் – ஜனவரியில் தொடங்கும் நவரைப் பருவத்திலும், ஜூன் – ஜூலையில் தொடங்கும் குறுவைப் பருவத்திலும் நடவு செய்யலாம். இதை ஒற்றை நாற்று முறையிலும் நடவு செய்யலாம். இந்த முறையில் ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை நெல் தேவைப்படும். சாதாரண நடவுமுறை என்றால் 25 கிலோ தேவைப்படும். நேரடி விதைப்பு முறைக்கு 15 கிலோ விதை தேவைப்படும். ஒற்றை நாற்று முறைக்கு முதலில் வயலைப் பண்படுத்த கோடை உழவு போல இரண்டு முறை நன்கு உழ வேண்டும். பிறகு பசுந்தாள் உரம் அல்லது நன்கு மட்கிய தொழுஉரம் இடலாம். பசுந்தாள் உரமிட தக்கைப்பூண்டு, கொளுஞ்சி, சணப்பு, சீமை அகத்தி ஆகியவற்றை ஏக்கருக்கு 15 கிலோ வரை விதையாகத் தூவி தண்ணீர் விட வேண்டும். இவை 25 நாட்களுக்குள் பூத்துவிடும். பிறகு மடக்கி உழுதுவிட்டு தண்ணீர் கட்டினால் ஒரு வாரத்தில் நன்கு மட்கிவிடும். அதன்பிறகு, மறு உழவு ஓட்டிவிட்டு நடவுப் பணி மேற்கொள்ளலாம்.

நாற்றங்கால் அமைக்கும் முன்பாக விதையை மாலை வெயிலில் ஒரு மணி நேரம் காய வைக்க வேண்டும். பிறகு, அந்த விதையை நீரில் ஊறவிட வேண்டும். விதை ஊறும் நீரில் ஒரு கிலோ நெல்லுக்கு ட்ரைக்கோடெர்மா விரிடி 4 கிராம், சூடோமோனாஸ் 10 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்டோ பாக்டீரியா தலா 8 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வைக்க வேண்டும். இந்தக் கரைசலில் விதை நெல்லை ஒரு நாள் வரை ஊற விட வேண்டும். இதனால் விதையில் உள்ள நோய்த்தொற்றுகள் நீங்கிவிடும். மறுநாள் விதையைக் கோணிப்பையில் கட்டி நீரை வடித்துவிட்டால் விதைக்கத் தயாராகிவிடும். நாற்றங்கால் என்றால் ஒரு ஏக்கர் விதை நெல்லுக்கு 20 சென்ட் என அமைக்கலாம். இதைத் தண்ணீர் விட்டு இரண்டு மூன்று உழவு ஓட்டி சமப்படுத்தி, நிலத்தை நன்கு ஊற வைத்த பின் விதைக்க வேண்டும். நாற்று நன்றாக வளர்ந்து வந்த பின் நடவுக்கு எடுக்கலாம்.நேரடி விதைப்பு என்றால் விதையை நேர்த்தி செய்து, மண்ணின் தரத்தை ஆய்வு செய்த பின் விதையைத் தூவ வேண்டும். முதல் நாள் மட்டும் தண்ணீர் விட வேண்டும். இரண்டாம் நாள் கொஞ்சம் தண்ணீர் விட வேண்டும். அன்று இரவே நீரை வடியவிட்டு நிலத்தைக் காய வைக்க வேண்டும். இப்படி மூன்று நாட்கள் செய்தால் அந்த விதை நன்கு முளைப்புத் திறன் பெற்று மேலே வரும். 20 முதல் 25 நாட்களில் பஞ்சகவ்யா அமிர்தக்கரைசல் கொடுப்பது நல்லது. ஒரு ஏக்கர் நாற்றங்காலுக்கு 20 கிலோ விதைக்கு அரை லிட்டர் அமிர்தக்கரைசல் போதுமானதாக இருக்கும்.

பூச்சி, நோய்த் தாக்கங்களில் இருந்து தப்பிக்க நிலத்தைச் சுற்றி `மஞ்சள் அட்டை’ வைக்கலாம். ஒரு ஏக்கருக்கு 15 அட்டைகள் வரை தேவைப்படும். இயற்கையான முறையில் பூச்சிக்கொல்லி தயாரிக்க ஆடு தீண்டாத இலைகளான எருக்கு, நொச்சி, வேம்பு, பிரண்டை, சோற்றுக் கற்றாழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு ஏக்கருக்குத் தலா ஒரு கிலோ என எடுத்துக்கொண்டு நன்கு இடிக்க வேண்டும். பிறகு இந்தக் கலவையை இரண்டு லிட்டர் மாட்டுக் கோமியத்தில் போட்டு ஒரு நாள் ஊறவைக்க வேண்டும். கலவை நன்கு நொதித்ததும் நீரை வடித்துவிட்டு கலந்து தெளிக்கலாம். நட்ட 15 நாள் ஒருமுறையும், 35வது நாள் ஒருமுறையும் களையெடுக்கலாம். மண்ணுக்குத் தகுந்தாற்போல் காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் பாய்ச்ச வேண்டும். கருங்குறுவை 125வது நாளில் அறுவடைக்கு தயாராகிவிடும். கருங்குறுவையின் நெல் மணிகள் கருப்பாகவும், அரிசி கருஞ்சிவப்பாகவும் இருக்கும். ஒரு ஏக்கரில் 2.1 டன் அரிசி கிடைக்க வாய்ப்புள்ளது. கருங்குறுவை அரிசியில் கஞ்சி, இட்லி, தோசை, சாதம் செய்யலாம். இதன் பலகாரங்களும் மிகுந்த ருசியாக இருக்கும். கருங்குறுவைக்கு அற்புதமான மருத்துவக் குணங்கள் உண்டு. இது குறைவாகவே பயிரிடப்படுவதால் தேவை அதிகமாக இருக்கிறது. இதனால் விலையும் சற்று அதிகம். இந்தளவுக்கு மகத்துவம் மிகுந்த கருங்குறுவை நெல்லை விவசாயிகள் சாகுபடி செய்து பலனடையலாம்.

 

Related posts

200 மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கும் விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த ரூ.12.90 லட்சம் ஒதுக்கீடு

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும்: முதல்வர் அறிவிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு