கருமத்தம்பட்டி அருகே கல்லூரி பஸ் மோதி தந்தை, மகன் பரிதாப பலி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

சோமனூர்: கருத்தம்பட்டி அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி மொபட்டில் சென்ற தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தின் சிசிடிவி கேமரா பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணபதிபாளையம் நார்த்தங்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு (66). விவசாயியான இவர், தனது மகன் நந்தகுமாருடன் (34) நேற்று காலை 6 மணி அளவில் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோவிலுக்கு செல்வதற்காக மொபட்டில் சென்றார். கிட்டாம்பாளையம் நான்கு சாலை சந்திப்பில் இருந்து கருமத்தம்பட்டி செல்வதற்காக வலது புறத்தில் மொபட் திருப்பிய போது பொள்ளாச்சியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பஸ் மொபட் மீது மோதியது.

இதில், பஸ்சின் முன்சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தந்தையும், மகனும் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த கருமத்தம்பட்டி போலீசார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக தனியார் கல்லூரி பஸ் ஓட்டுநர் செல்வம் என்பவரை கைது செய்து கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், பொள்ளாச்சியை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் மாணவர்களை, சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்து கொள்ள வைப்பதற்காக கல்லூரி பஸ்சில் அழைத்து சென்றபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,“திருச்சி மைசூர் செல்லும் இந்த நெடுஞ்சாலையில் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. அப்படி வேகத்தடை அமைத்து இருந்தாலும் மிளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டாததால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வரும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர்’’ என்றனர். இதனிடையே தந்தையும், மகனும் இரு சக்கர வாகனத்தில் சாலையைக் கடந்த போது பஸ் மோதும் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ காட்சியில் தந்தை, மகன் இருவரும் இரு சக்கர வாகனத்தில் வந்து சாலை கடக்க நிற்பதும் அதிவேகமாக வந்த பஸ் அவர்களின் மீது மோதியும், அதன்பிறகும் நிற்காமல் சென்று இருவர் உடல் மீதும் ஏறி உடல் நசுங்கி பலியானது சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்