மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கரு.முத்து கண்ணன் மறைவு ஒட்டுமொத்த தமிழ்ப் பேரினத்திற்குமான பேரிழப்பாகும்: சீமான்..!

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கரு.முத்து கண்ணனுக்கு சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தொழிற்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கிய பெருந்தகை ஐயா கருமுத்து தியாகராஜன் அவர்களின் மகனும், மதுரையில் புகழ்பெற்ற தியாகராஜர் கல்லூரிகள், தியாகராஜர் ஆலைகள் மற்றும் பல நிறுவனங்களின் தலைவரும், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்காரும், தமிழ்ப் பற்றாளருமான பெருமதிப்பிற்குரிய ஐயா கருமுத்து கண்ணன் மறைவுற்ற துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

இந்திய நாட்டின் விடுதலையில் மிகுந்த வேட்கை கொண்டிருந்தவரின் மகனாகப் பிறந்து, தந்தையின் நிறுவனங்களை ஏற்று, திறம்பட நடத்தி தொழிற்துறையில் கோலோச்சினாலும், மெய்யியல் மீது கொண்ட அளவற்ற ஈடுபாடு காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் திருத்தொண்டு பலபுரிந்தும், ஏழை எளிய மக்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்தும், கல்வித்தந்தையாக எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியும், மதுரை மக்களின் பேரன்பிற்கும், போற்றுதலுக்கும் உரிய மாண்பாளராகத் திகழ்ந்தவர்.

அன்னைத்தமிழின் மீது பெருங்காதலும், தமிழ்த்தேசியக் கருத்தியலில் மிகுந்த உறுதிப்பாடும் கொண்டிருந்த ஐயா கருமுத்து கண்ணன் அவர்களது மறைவு மதுரை மக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்ப்பேரினத்திற்குமான பேரிழப்பாகும். ஐயா கருமுத்து கண்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். பெருந்தமிழர் ஐயா கருமுத்து கண்ணன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்