புண்ணியம் நல்கும் சபரிமலை யாத்திரை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சபரிமலையில் கார்த்திகை முதல் தேதி மண்டல காலம் ஆரம்பமாகும். அன்று முதல் 41 நாட்கள் நடக்கும் பூஜை ஒரு மண்டலகாலம் எனப்படும். 41-வது நாள் மண்டலபூஜை நடக்கும். சபரிமலைக்கு யாத்திரை சென்று சபரிமலை நாதனையும், மகர ஜோதியையும் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், முதலில் மாலை அணிந்து கொள்கிறார்கள். மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்;

“ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குருமுத்ராம் நமாம் யஹம்
வனமுத்ராம் சுக்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம் யஹம்
சாந்தமுத்ராம் சத்தியமுத்ராம் வ்ருதுமுத்ராம் நமாம் யஹம்
சபர்யாஸ்ரம சத்யேன முத்ராம் பாது ஸதாபிமே
குருதக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே

சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயா யஹம்
சின் முத்ரா கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம் யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நமஹ’’

ஹரிஹர சுதனான ஐயப்பனைக்காண அணியும் இந்த மாலை மகாவிஷ்ணுவுக்கு உகந்த துளசி மாலையாக அல்லது பரமசிவனுக்கான உருத்திராட்சை மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாக பார்த்து வாங்கி அத்துடன், ஐயப்ப திருவுருவப் பதக்கம் ஒன்றினையும் இணைத்து; பலமுறை (7-முறையாவது) முறையாக விரதம் இருந்து பெருவழிப் பாதையில் சென்று வந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரை குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோயில்களிலோ குருநாதரை வணங்கி அவர் தம் திருக்கரங்களால் மாலையணிந்து கொள்ள வேண்டும். மாலையணிந்து கொண்டவுடன் குருநாதருக்கு தங்களால் இயன்ற குரு தட்சணையை கொடுத்து அடிவணங்கி ஆசிபெற வேண்டும்.

மாலை அணிந்து கொண்டவர் பொருளாதார ரீதியாகவும் வயதிலும் எவ்வளவு சிறியவராக இருந்தாலும் அவரையும் மற்றவர்கள் `சாமி, சாமி’ என்று மரியாதையாக அழைத்து சரணம் சொல்லி வணங்க வேண்டும். ஒருவரை ஒருவர் மதித்து, வணங்கும் கலாச்சாரம் இங்குதான் ஆரம்பமாகின்றது. எல்லோரையும் ஐயப்பனாகவே காண்கிறார்கள். சபரிமலை யாத்திரை செல்லும்போது இருமுடி அணிந்து செல்வார்கள்.இருமுடி என்பது என்ன?

“இருமுடி’’ என்பது, இரண்டு முடிச்சுகளாகும். அதன் ஒரு முடிச்சில் இறைவனை அபிஷேகித்து பூஜிப்பதற்காக, உரித்த தேங்காயில் பெரிய கண்ணை துளையிட்டு அதனுள் இருக்கும் இளநீரை வெளியேற்றிய பின் அதனுள் சுத்தமான பசுநெய் நிரப்பி ஒழுகாது இருப்பதற்காக மெழுகினால் முத்திரையிடப் பெற்ற தேங்காயும், அபிஷேகத் திரவியங்களும் இருக்கும். தேங்காயாகிய முக்கண்ணன் சிவனுக்குள் நெய்யாகிய நாராயணமூர்த்தி நிறைந்திருப்பதனால், நெய் நிரப்பிய தேங்காய் ஹரிஹர புத்திரன் ஐயப்பனைக் குறிக்கின்றது. மற்றைய முடிச்சில் யாத்திரையின் போது பாவிப்பதற்கான பாவனைப் பொருள்கள் இருக்கும். இவை யாத்திரையின் இறுதியில் தீர்ந்துவிட எஞ்சி இருப்பது சிவனுக்குள் நிறைந்திருக்கும் நாராயண மூர்த்தியின் வடிவமான ஐயப்பன் மட்டுமே.

இருமுடி கட்டும் முறை

நீலம், காவி அல்லது கருப்பு நிற துணியில் பூஜைபொருட்களை குருசாமி முன்னிலையில் நிரப்ப வேண்டும். துணியை இரண்டு பகுதியாக பிரித்து ஒரு பகுதியில் நெய் நிரப்பிய தேங்காய், பச்சரிசி, வாழைப்பழம், அவல், பொரி, சந்தனம், பத்தி, விபூதி, குங்குமம், மஞ்சள்பொடி, வெல்லம், கல்கண்டு, உண்டியல் காசு ஆகிய பூசைப் பொருட்களை வைக்க வேண்டும். பின் முடியில் தனக்கு தேவையான உணவுப் பொருள்களை வைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தவரை இருமுடி தலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

சமத்துவம் காட்டும் ஐயப்பன் ஐயப்பனும் வாபர் சுவாமியும் இரண்டறக் கலந்து நின்று அருள் புரிவதைப் போலவே இஸ்லாம் மதத்தாரும் மாலை அணிந்து இருமுடி தாங்கி ஐயப்பசுவாமி கோயிலுக்குப் பெரும் திரளாக வந்திருந்து வழிபட்டு அருள் பெறுகிறார்கள். இதனால் இந்து, இஸ்லாம் இன ஒற்றுமை ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி வளர்கின்றது. எனவே இந்த யாத்திரையின் மூலம் ஒருமைப்பாட்டு உணர்வு வளர்கின்றது. சாதி, சமய வேறுபாடுகள் வேரறுக்கப்படுகின்றன. சமத்துவம் என்பது நடைமுறையில் நடத்திக் காட்டப்படுகிறது. நல்லவைகளையே செய்து நல்லவைகளையே நினைத்து “சுவாமியே சரணம் ஐயப்பா…’’ என்ற தாரக மந்திர சக்தியுடன் பக்தர் பெருவெள்ளம் பரம்பொருளை உணர்ந்து கொள்ளத் துடிக்கும் ஓர் அறப்போர்க்களமே ஐயப்பசுவாமியின் சபரிமலை யாத்திரை என்றால் மிகையாகாது.

எருமேலி

எருமேலிப் பேட்டை ஆடுதல் சபரிமலை யாத்திரையில் முக்கியமான அம்சமாகும். இங்கு இந்துக்களும், முஸ்லீம்களும் ஒரு தாய் மக்கள் போல் சகோதர பாசத்துடன் பழகுவதைக் காணலாம். ஜனசந்தடி நிரம்பப்பெற்ற எருமேலி கடைவீதியின் நடுமையத்தில் வாபர் ஆலயம் அமையப்பெற்றுள்ளது. ஹரிஹர புத்திரரான ஸ்ரீதர்மசாஸ்தா வேடனைப்போல் வில்லும் அம்பும் தரித்த நிலையில் நிற்கும் தோற்றத்தில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு தாவளம் (தங்கும் கூடாரம்) போடாமல் செல்ல மாட்டார்கள். ஒவ்வொரு ஐயப்ப பக்தர்களும் பாகுபாடின்றி வண்ணப் பொடிகள் பூசி வாபரை வணங்கி, பேட்டை துள்ளி, அதன் பின் குளித்து ஐயனை வழிபட்டு இருமுடிக்கட்டு தலையில் ஏற்றியவாறு சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரணகோஷத்துடன் இங்கிருந்து அடர்ந்த காட்டில் பெருவழிப் பயணம் ஆரம்பமாகின்றது.

பேரூர்த்தோடு

இது மிகவும் புராதனமான முக்கியத்துவம் வாய்ந்த வாய்க்காலாகும். கிழக்கு முகமாக நாம் துவங்கிய வனயாத்திரையில் இளைப்பாற சிறந்த இடம் இந்தப் பேரூர்த்தோடாகும். எருமேலியிலிருந்து இரண்டு மைல் தூரமுள்ள இந்தப் பேரூர்த்தோடு கானகத்தையும், கிராமத்தையும் பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளது.வனயாத்திரையில் தர்ம சாஸ்தா இந்த பேரூர்த்தோடில் குளித்து இளைப்பாறியதாகக் கூறப்படுகின்றது. யாத்திரை மேற்கொண்டுள்ள ஐயப்பன்மார் இத்தோடில் குளித்து மலர், அரிசிப் பொரி இவற்றை வாய்க்காலில் உள்ள மீன்களுக்கு தூவி தமது பக்தியை வெளிப்படுத்துவர். இந்த இடத்திலிருந்து அரசாங்கத்தின் விலையுயர்ந்த தேக்கு தோட்டம் ஆரம்பமாகும். பேரூர்த்தோடை அடையும் இடம் வரை உள்ள ஸ்தலத்திற்கு கோட்டைப்படி என்று பெயர்.

கோட்டைப்படி

கோட்டைப்படியைக் கடந்தால் அங்கிருந்து தொடங்கும் இடம் தர்ம சாஸ்தாவின் பூங்காவனம் என்றழைக்கப்படும். ஆகையால் அங்கு இரண்டு இலைகளைப் பறித்து வழிபாடு செய்த பிறகுதான் கடந்து செல்ல வேண்டும். கோட்டைப்படி என்பது கோஷ்டஸ்தானம் என்ற அர்த்தத்திலிருந்து இந்த கோட்டைப்படி என்ற சொல் தோன்றியுள்ளது. அங்கிருந்து காளைகெட்டி, காளைகெட்டியில் இருந்து சுமார் ஒன்றரை மைல் கிழக்காக நடந்தால் அழுதாநதி.

அடுத்ததாக, அழுதையேற்றம். அழுதாநதியிலிருந்து நடக்க ஆரம்பிக்கும் ஐயப்பன்மார்களுக்கு, இரண்டு மைல் செங்குத்தான மலையேற்றம் எதிர்படும். இதைத்தான் அழுதையேற்றம் என்று சொல்வார்கள். இதைவிட கடினமான ஏற்றம் வேறு ஏதுமில்லை. அதன் பின், இஞ்சிப்பார கோட்டம், கரிமலைத்தோடு தீரம், கரிமலை ஏற்றம், பம்பாநதிக்கு வரவேண்டும்.

புண்ணிய பம்பாநதி

பம்பாஸ – கிஸ்தலம் புவனேகசுந்தரம் பந்தள ராஜனின் கமனீய மந்திரம், தட்சிண கங்கையென்ற அடைமொழியுடன் கீர்த்தி பெற்றதும் ஐயப்பனின் ஜனனஸ்தானம் என்ற புகழும் இந்த பம்பா தீர்த்தத்திற்கு உண்டு. பல வனமூலிகைகளின் சாறு கலந்து பாவங்களைக் கொல்லும் அபார சக்தியும் நிரம்பப் பெற்று ஸ்படிகத்திற்கு ஒப்பான நிறத்துடன் கரை புரண்டோடும் பம்பையின் `ஜலப்ரவாஹம்’ நமது இருதயத்தை ஆகர்ஷித்து நிர்மாலயத்தை ஏற்படுத்தும். அங்கிருந்து பயபக்தியோடு, சரண கோஷத்துடன் நடந்து சென்றால் அப்பாச்சிமேட்டை அடைந்துவிடலாம்.

சபரிபீடம்

அப்பாச்சிமேட்டைக் கடந்து சற்று நடந்தால் இயற்கை அழகு நிறைந்த ஒரு சமநிலத்தைக் காணலாம். நீலிமலையின் உச்சியில் சபரிபீடம் உள்ளது. இந்த பீடம் உள்ள பகுதியில்தான் “சபரிமலை’’ என்று பெயர் தோன்றக் காரணமான சபரி அன்னை வசித்தாள்.

சபரிமலை ஐயப்பன்

சரங்குத்தி தாண்டியவுடன் தெரியும் ஐயப்பனின் தங்க கோயிலை தரிசித்தவுடனேயே, பஞ்சேந்திரியங்களையும் தட்டி எழுப்பி மனம் உற்சாகமாகிறது. சரங்குத்தியிலிருந்தே ஐயப்பனின் நான்காவது மலையான சபரிமலை ஆரம்பமாகிறது.

மூலஸ்தானம்

கொடிமரம் தாண்டியவுடன் உள்ள சந்நதியில் ஆனந்த சொரூபனாய், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக, கேட்டவரம் தரும் வள்ளலாக ஐயப்பன் அருள்பாலிக்கிறார். இவர் மூன்று விரலை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக் கொண்டு “சின்முத்திரை’’ காட்டுகிறார். “சித்’’ என்றால் அறிவு. இந்த வார்த்தையே “சின்’’ என திரிந்துள்ளது. எது உண்மையான அறிவு என்பதை விளக்குவது சின்முத்திரை. நாம் உய்யும் வழியை காட்டுவதுதான் சின்முத்திரை. இங்கே கட்டைவிரல் இறைவனாகவும், ஆள்காட்டிவிரல் ஆன்மாவாகவும், மற்றைய மூன்று விரல்களும் மும்மலங்கள் என்றழைக்கப்படும் ஆணவம், கன்மம், மாயையாக ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

“மனிதா! நீ என்னை நாடி இத்தனை மேடுகளை கடந்து வந்தாயே! இதனால், நான் மகிழ மாட்டேன். என் மடங்கிய மூன்று விரல்கள் உன்னிடமுள்ள ஆணவம், கன்மம், மாயை (உலக வாழ்வும் இன்பமும் நிலைத்திருப்பது என்ற எண்ணம்) ஆகியவை. என் ஆட்காட்டி விரலே ஜீவாத்மாகிய நீ. என் கட்டை விரலே பரமாத்மாவாகிய நான். ஆம்.. மானிடனே! இந்த மூன்று குணங்களையும், நீ விட்டு விட்டாயானால், என்னை நிஜமாகவே அடையலாம், காண்பாய்’’ என்கிறார்.

யோகபாதாசனத்தில், சற்று கண் திறந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனைக் கண்குளிரத் தரிசிக்கும் போது, இவரது காலில் சுற்றியுள்ள வஸ்திரம் ஒன்றை அவசியம் கவனிக்க வேண்டும். இதை “யோக பட்டம்’’ என்பர்.

நெய் அபிஷேகம்

ஐயப்பனை வணங்கிவிட்டு கணபதி, நாகரை வணங்க வேண்டும். இருமுடியில் உள்ள நெய் தேங்காயை உடைத்து அதிலிருக்கும் நெய்யை ஐயப்பனின் அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்த நெய்யை பாத்திரத்தில் ஊற்றி புரோகிதர் பக்தருக்கு கொடுப்பார். இந்த நெய் ஒரு புனிதமான மருந்து என்பதால் பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு வருவர்.

வாபர் வழிபாடு

ஐயப்பன் கோயில் 18-ஆம் படிக்குகீழாக கிழக்கு பக்கத்தில் வாபரை பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். இங்கே ஒரு இஸ்லாமியர் பூஜை வழிபாடுகளை செய்வார். வாபருக்கு நெல், நல்லமிளகு, சந்தனம், சாம்பிராணி, பன்னீர், நெய், தேங்காய் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தலாம்.

ஜோதி தரிசனம்

தைமாதம் முதலாம் நாள் மாலை சபரிமலை சந்நதிக்கு எதிர்ப்புறம் உள்ள திசையில் உள்ள காந்தமலை உச்சியில் மாலை 6.30 மணிமுதல் 6.45 மணிவரைக்குள் ஹரிஹர சுதன் ஐயன் ஐயப்பசுவாமி ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்வார்.இந்த வருட சபரிமலையில் நடை திறப்பு விவரம்:- சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு ஆண்டு மண்டல – மகரவிளக்கு சீசனை முன்னிட்டு வருகின்ற 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.

நவம்பர் 17-ஆம் தேதி முதல் டிசம்பர் 27-ஆம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். மேலும், டிசம்பர் 27-ஆம் தேதி இரவு நடை அடைக்கப்படும். மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்படும். டிசம்பர் 31-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 15-ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெறும்.

தொகுப்பு: குடந்தை நடேசன்

Related posts

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 79 (பகவத்கீதை உரை)

தெளிவு பெறுவோம்

மனநலத்தை சீர்படுத்தும் குணசீலம்