கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்; கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர்திறப்பு 13,938 கன அடியாக அதிகரிப்பு..!!

பெங்களூர்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர்திறப்பு 13,938 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குடகு தலக்காவேரி, மைசூர், மண்டியா, சிவ்மோகா, வட கர்நாடகா கடலோர பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. குறிப்பாக ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 2 அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதனால் இந்த அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணராஜசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நேற்று இரவு 44, 436 கனஅடியாக இருந்த நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி 48,025 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் கொள்ளளவு 124.80 அடியில், தற்போது 100 அடியை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் 2,688 கனஅடி காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. காலை நிலவரப்படி கபினி அணைக்கு நீர்வரத்து 25,896 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 80.51 கனஅடியாக உள்ளது. கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 13,983 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் நீர் திறப்பு பிற்பகலில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Related posts

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

இங்கிலாந்தில் இந்தியா