ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி ஒப்புதல் அளித்தது பாஜ அரசு கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அண்ணாமலை மறைமுக ஆதரவு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

விருதுநகர்: கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அண்ணாமலை மறைமுக ஆதரவு அளிப்பதாக காங். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார். முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நேற்று விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்ற காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் கூறியதாவது: கர்நாடக பாஜ அங்குள்ள காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து மேகதாதுவில் அணையை கட்ட வேண்டும் என்கிறது. நாங்கள் தமிழக அரசின் பக்கம் நிற்கிறோம். அணை கட்டக்கூடாது என்கிறோம். பாஜ தலைவர் அண்ணாமலை மறைமுகமாக கர்நாடகாவில் அணை கட்ட வேண்டும் என நினைக்கிறார். மேகதாதுவில் அணை கட்ட ரூ.1,000 கோடியை ஒதுக்கியது பாஜவின் பசவராஜ் பொம்மை அரசுதான். அணை கட்ட வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததும் பாஜ அரசு தான். அப்போது அண்ணாமலை எங்கே போனார்?

ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் போடுவேன் என பிரதமர் கூறியது பற்றி, 9 வருடம் கழித்து தமிழிசை விசித்திரமான கருத்தைக் கூறுகிறார். இதுபற்றி பொதுமக்கள் கேள்வி கேட்டதால் உண்மைக்கு புறம்பான விஷயங்களை பாஜவினர் கூறுகின்றனர். மோடி அரசை அப்புறப்படுத்தவே கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. பாஜவிற்கு எதிராக சிறிய, சிறிய கட்சிகளையும் ஒன்றிணைப்போம். பிரதமர் மோடி 23 ஆயிரம் மக்கள் பேசக்கூடிய சமஸ்கிருத மொழிக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கியுள்ளார். 10 கோடி மக்கள் பேசக்கூடிய தமிழ் மொழிக்கு ரூ.12 ஆயிரம் லட்சம்தான் ஒதுக்கியுள்ளார். உண்மையில் அவர்களுக்கு தமிழ் மீது பற்று இருக்குமானால் தமிழ் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். அவர்கள் பேசுவது எல்லாம் விளம்பரம் தான். உண்மை இல்லை. இவ்வாறு கூறினார்.

Related posts

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சோழவரம் அருகே பரபரப்பு 2 குடிசை வீடுகளில் திடீர் தீ விபத்து

பெரியபாளையத்தில் மண் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி