கர்நாடக தேர்தல் களம் : நிர்மலா சீதாராமன், பசவராஜ் பொம்மை வாக்களிப்பு; ஜனநாயக திருவிழாவை செழுமைப்படுத்த பிரதமர் வேண்டுகோள்!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஹுப்பாலியில் உள்ள ஹனுமான் கோவிலில் முதல்வர் பசவராஜ் பொம்மை வழிபாடு செய்தார். அவர் ஷிகாவ்ன் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், முதல்வர் பசவராஜ் பொம்மை, மாநிலத்தின் வளர்ச்சிக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து, கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா,தனது மகன் பிஒய் விஜயேந்திராவுடன் ஷிகாரிபுராவில் உள்ள ஹுச்சராயா கோயிலுக்குச் சென்று வழிபட்டார். விஜயேந்திரர் தனது தந்தை எடியூரப்பா போட்டியிடும் பாரம்பரிய தொகுதியான ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். ஷிகாரிபுராவில் உள்ள வாக்குச் சாவடியில் எடியூரப்பா தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சிதான்.. சந்தேகம் எதுவும் இல்லை என்றும் பாஜக 130-150 இடங்களில் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதே போல், பெங்களூரு ஜெயாநகரில் உள்ள வாக்குச் சாவடியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வாக்கை பதிவு செய்தார். இதனிடையே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு சாந்தி நகரில் உள்ள செயிண்ட் ஜோசப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தொடர்ந்து பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடக தேர்தல் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “காலை வணக்கம் கர்நாடகா.. நான் வக்குப்புவாத அரசியலுக்கு எதிராக.. 40% ஊழல் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளேன். உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போல், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடக மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்து தேர்தல் என்னும் ஜனநாயக திருவிழாவை செழுமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்