கர்நாடகா தேர்தல் முடிவு நாட்டின் நிலை மாறி வருவதை காட்டுகிறது: சரத் பவார் கருத்து

மும்பை: ‘நாட்டில் சமூக மற்றும் வகுப்புவாத பிளவை தூண்டும் சக்திகளை எதிர்த்து போராடுவதே அனைவரின் முன் உள்ள சவாலாக உள்ளது. ஆனாலும், கர்நாடகா தேர்தல் முடிவு, நிலைமை படிப்படியாக மாறி வருவதை காட்டுகின்றன’ என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறி உள்ளார். கர்நாடகாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேசியதாவது:

அதிகாரத்தில் உள்ள சில சக்திகள், சமூகத்தில் சாதி மற்றும் மத அடிப்படையில் பதற்றத்தை தூண்டி நாட்டை பின்னோக்கி கொண்டு செல்கின்றன. அவர்கள் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தாமல், அவர்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அத்தகைய சக்திகளுக்கு எதிராக போராடுவதே நம் அனைவர் முன் உள்ள சவாலாகும். அதே சமயம், கர்நாடகாவில் சமீபத்திய தேர்தல் முடிவு, நாட்டில் நிலைமை படிப்படியாக மாறி வருவதை காட்டுகின்றன. கர்நாடகாவில் சாமானியர்களின் அரசு பொறுப்பேற்றுள்ளது. உழைக்கும் வர்க்கம் வலுவாகவும், ஒற்றுமையாகவும் இருந்தால், கர்நாடகா தேர்தல் முடிவு, நாட்டின் பிற இடங்களிலும் பிரதிபலிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

பெண் ஆசை காட்டி 100 பேரிடம் பணம் பறித்த கில்லாடி இளம்பெண்: பரபரப்பு தகவல்கள்

மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கி.மீ தூர மேற்கு புறவழிச்சாலை பணி ஜனவரியில் முடியும்