கர்நாடகாவில் 12 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 55 இடங்களில் லோக் ஆயுக்தா மெகா ரெய்டு

பெங்களூரு: கர்நாடகாவில் 12 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 56 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டில் ஏற்கனவே 3 முறை, ஒரே சமயத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்திய லோக் ஆயுக்தா, இந்த ஆண்டில் 4வது முறையாக நேற்று மெகா ரெய்டு நடத்தியது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் மாநிலத்தில் 11 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 56 இடங்களில் அதிரடி சோதனை நடத்திய லோக் ஆயுக்தா அதிகாரிகள், ரூ.45.1 கோடி மதிப்பிலான கணக்கில் வராத, வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துகளை கண்டுபிடித்து, அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று 12 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 55 இடங்களில் உள்ளூர் போலீசார் உதவியுடன் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 100 அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்த மெகா ரெய்டை நடத்தினர். மங்களூரு மாநகராட்சி ஆணையர் சி.எல்.ஆனந்த்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர். மூத்த கேஏஎஸ் அதிகாரியான ஆனந்த், கடந்த ஆண்டு ஜூன் மாதம் மங்களூரு மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். பெங்களூரு ஊரக மாவட்ட முனிசிபல் கவுன்சில் ஆணையர் ஹெப்பகோடி மற்றும் கேஏஎஸ் அதிகாரி நரசிம்ம மூர்த்தி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

தொழில் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் இயக்குநர் சி.டி.முத்து குமார், யாதகிரி மாவட்ட பஞ்சாயத்து திட்ட இயக்குநர் பல்வந்த் ரத்தோட், பெங்களூரு ஊரக மாவட்ட மூத்த கால்நடைத்துறை அதிகாரி ஆர்.சித்தப்பா, வணிக வரித்துறை இணை இயக்குநர் ரமேஷ் குமார், அளவீட்டுத்துறை துணை கட்டுப்பட்டுப்பாளர் அக்தர் அலி, ஷிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகாவில் உள்ள அந்தர்கங்கே கிராம பஞ்சாயத்து தலைவர் நாகேஷ்.பி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பிரகாஷ், மண்டியா தொழிலாளர் நலத்துறை அதிகாரி சேத்தன் குமார் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் என பெங்களூரு, தும்கூரு, ஷிவமொக்கா, யாதகிரி, கலபுர்கி ஆகிய நகரங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அக்தர் அலியின் வீட்டில் ரூ.25 லட்சம் ரொக்கம், 275 சவரன் தங்கம், 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை லோக் ஆயுக்தா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

* மொத்தம் ரூ.50 கோடி பறிமுதல்
லோக் ஆயுக்தா சோதனையில் 12 அரசு அதிகாரிகளும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து விவரங்களை இருட்டடிப்பு செய்ததும் கண்டறியப்பட்டது. நேற்று மெகா சோதனை நடத்திய லோக் ஆயுக்தா, சோதனை முடிவில் 12 அதிகாரிகளின் சொத்து மதிப்பையும் வெளியிட்டது. அதன்படி, மொத்தமாக ரூ.50 கோடி மதிப்பிற்கு சொத்து சேர்த்து வைத்திருக்கின்றனர். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சொத்துகளை குவித்து வைத்திருப்பது அம்பலமானது. இதையடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சட்ட நடைமுறைப்படி தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்.

Related posts

போதைப்பொருள் நடமாட்டம் தடுக்க டிஜிபி தலைமையில் சிறப்பு படை அமைக்க ராமதாஸ் வலியுறுத்தல்

அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகளில் சிறப்பு வழக்கறிஞர்களை அரசு தரப்பில் நியமிக்க கோரி மனு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

நீர்நிலை பாதுகாவலருக்கு விருது வழங்கும் திட்டம் தமிழக அரசுக்கு சவுமியா அன்புமணி பாராட்டு