கர்நாடக மாநிலத்தில் குரங்கு காய்ச்சல் எதிரொலி; தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

வேலூர்: கர்நாடக மாநிலத்தில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் மருத்துவ கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கியாசனூர் வன நோய் (கேஎஃப்டி) எனப்படும் குரங்கு காய்ச்சலுக்கு கர்நாடக மாநிலத்தில் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரகர்நாடகத்தில் 37 பேருக்கும், ஷிமோகாவில் 13 பேருக்கும், சிக்மகளூரில் 3 பேருக்கும் அந்தத் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இவர்களில் 2 பேர் இறந்துள்ளனர். வனப்பகுயில் கடந்த 1957ம் ஆண்டில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று மூலம் இந்தக் காய்ச்சல் பரவி வருகிறது. ஆண்டுதோறும் 400 முதல் 500 பேர் இந்தப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தொற்றுக்குள்ளான உண்ணிகளால் கடிக்கப்பட்ட குரங்குகள், கால்நடைகள் மூலமாக இந்த வகை வைரஸ் பரவுகிறது. தொற்றால் உயிரிழந்த குரங்குகளிலிருந்தும் இந்தப் பாதிப்பு வேகமாக பரவுகிறது.

மனிதர்களுக்கு காய்ச்சல், உடல்வலி, தலைவலி, வாந்தி, ஜீரண மண்டல பாதிப்புகள், ரத்தப்போக்கு ஆகியவை அதன் முக்கிய அறிகுறிகளாகும். ஓரிரு வாரங்களில் பெரும்பாலானோருக்கு அந்தப் பாதிப்பு குணமடைந்துவிடும் என்றாலும், சிலருக்கு தீவிர எதிர்விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. பிசிஆர் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் மூலமாக குரங்கு காய்ச்சல் பாதிப்பை உறுதி செய்ய முடியும்.

இதுதொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் கேரளா, கர்நாடக மாநில எல்லைகளையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மருத்துவ கண்காணிப்பை முன்னெடுக்க வேண்டும். அதேபோன்று காய்ச்சல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு உரிய பரிசோதனை நடத்தி பாதிப்பை அறிய வேண்டும்.

இதுதொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம். குறிப்பாக கால்நடைகளை தூய்மையாக பராமரிப்பதையும், காடுகளுக்குள் அவை செல்லாமல் தடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும். தொற்றை பரப்பும் உண்ணி பூச்சிகளை கண்டறிந்து அழிக்க வேண்டும். பூச்சி கடிகள் ஏற்படாதவாறு முழுமையாக மூடிய ஆடைகளை அணியுமாறு மக்களை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related posts

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

இங்கிலாந்தில் இந்தியா