கர்நாடக மாநிலம் தோட்டம் ஒன்றில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளியை திருடி சென்றதால் பெண் விவசாயி அதிர்ச்சி..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தோட்டம் ஒன்றில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டதால் தக்காளி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தக்காளி திருடர்களை தேடி வருகின்றனர். கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் குறைவான மழை பொழிவு மற்றும் உரங்களின் விலை உயர்வால் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஹாசன் மாவட்டத்தில் தரணி என்ற விவசாயி 2 ஏக்கர் பரப்பளவில் தக்காளி செடி பயிரிட்டிருந்தார்.

நன்கு விளைந்திருந்த தக்காளி பழங்களை அறுவடை செய்து பெங்களூரு மார்க்கெட்டுக்கு அனுப்ப இருந்த நிலையில் தோட்டத்தில் அடையாளம் தெரியாத சிலர் ரூ.2.5 லட்சம் மதிப்புடைய தக்காளியை கொள்ளையடித்து சென்றிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் 50 முதல் 60 பைகளுடன் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் தக்காளிகளை அல்லி சென்றதோடு தோட்டத்தையும் நாசம் செய்து சென்றுள்ளனர். இதையடுத்து விவசாயி தரணி ஹளபீடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்திய தண்டனை சட்டப்பிரிவு 379-ன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தக்காளி திருடர்களை தேடி வருகின்றனர்.

Related posts

செட்டிகுளம் முருகன் கோயிலில் புரட்டாசி கிருத்திகை விழா கோலாகலம்: வெள்ளி தேர் இழுத்து பக்தர்கள் தரிசனம்

சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி உருவாக்கப்படும்: தமிழ்நாடு அரசு அரசாணை

பில்லி சூனியம், செய்வினை சிறப்பாக செய்வார்; அதிமுக மாஜி எம்எல்ஏ பற்றி பரபரப்பு போஸ்டர்