இந்தியா கூட்டணியில் விரிசல் மம்தாவிடம் பேசினார் கார்கே

புதுடெல்லி; மேற்குவங்க மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜியிடம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். பா.ஜ தலைமையிலான ஒன்றிய அரசை வீழ்த்த நாட்டில் உள்ள 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. மேற்குவங்க மாநிலத்தில் கம்யூனிஸ்ட் தனியாக போட்டியிடுவதாக அறிவித்து விட்டது. இதனால் மேற்குவங்கத்தில் இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தாவை தொடர்பு கொண்டு பேசினார். இந்த தகவலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் கார்கே, மேற்குவங்க முதல்வர் மம்தாவை தொடர்பு கொண்டு பேசினார். தொகுதி பங்கீடு விவகாரத்தில் நாங்கள் ஒரு வழியைக் கண்டுபிடிப்போம்.

ஏனெனில் மம்தாவின் நோக்கம் தான், இந்திய கூட்டணியின் நோக்கமாகும். இது மேற்கு வங்காளத்தில் மட்டுமல்ல, நாட்டின் மற்ற பகுதிகளிலும் பாஜவை வலுவாகவும், உறுதியாகவும் தோற்கடிக்க உதவும். காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் ஒரு பகுதியில் மம்தா கலந்து கொண்டால் மகிழ்ச்சியும் பாக்கியமும் அடைவார்கள். அவரது வருகையால் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மிகவும் வலுவடையும். மம்தா இல்லாமல், மேற்குவங்கம் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் பாஜவை எதிர்த்துப் போராட முடியாது. அவர் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைந்த, இன்றியமையாத தூண். அவர் இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். இவ்வாறு தெரிவித்தார்.

 

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு