கிடப்பில் ரயில்வே நடைமேடை பணி : காரைக்குடியில் பயணிகள் அவதி

காரைக்குடி : காரைக்குடி ரயில்வே ஸ்டேசனுக்கு பல்லவன், ரமேஸ்வரம் சென்னை, செங்கோட்டை, சிலம்பு, கோவை, புவனேஷ்வர், கன்னியாகுமரி என எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில் என 25 ரயில்கள் இயக்கப்படுகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனர். இங்கிருந்து சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம், மானாமதுரை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அதிகளவில் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.
இங்கு 5 பிளாட்பாரம் உள்ளன.

இதில் முதல் பிளாட்பாரத்தில் ரமேஸ்வரம் சென்னை, செங்கோட்டை சென்னை, கன்னியாகுமரி பாண்டிச்சேரி, ரமேஸ்வரம் சென்னை பயணிகள் ரயில்கள் வரும். 2,3வது பிளாட்பாரத்தில் வாரணாசி ராமேஸ்வரம், சேது, கோவை ரமேஸ்வரம், புவனேஸ்வர் ரயில்களும், 2வது பிளாட்பாரத்தில் மானாமதுரை திருச்சி, மன்னார்குடி, விருதுநகர் திருச்சி ஆகிய பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.

4,5வது பிளாட்பார்த்தில் காரைக்குடி பட்டுக்கோட்டை இயக்கப்படுகிறது. முதல் பிளாட்பாரத்தில் இருந்து மற்ற ரயில்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள நடைமேடை நீண்ட தூரத்தில் உள்ளது. இது பயணிகள் செல்ல ஏதுவாக இல்லை. நடைமேடை அதிக தூரம் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால் பயணிகள் முதல் பிளாட்பாரத்தில் இருந்து கீழே இறங்கி ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து 2,3வது பிளாட்பாரத்தில் செல்லும் அவலநிலை உள்ளது.

பயணிகளின் நலன் கருதி நீண்ட தூரத்தில் உள்ள நடைமேடையை மாற்றி அமைக்க வேண்டும். ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், நடைமேடை அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது. முதல்கட்ட பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. ஆனால் திடீர் என நிதி ஒதுக்கவில்லை என கூறி பணியை துவங்கிய வேகத்தில் கைவிட்டுள்ளனர். ரயில்வே நிர்வாகம் உரிய நிதி ஒதுக்கி பணியை மீண்டும் துவங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழில் வணிகக்கழகத் தலைவர் சாமி திராவிடமணி கூறுகையில், ரயில்வே நடைமேடை அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலன்கருதி இம்முறையாவது நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

Related posts

பைக்கில் ‘லிப்ட்’ கேட்ட வாலிபரை தாக்கி நகை, பணம், செல்போன் பறிப்பு: 4 கொள்ளையர்கள் கைது

ஹிஸ்புல்லா தலைவர் கொலையை கண்டித்து ஸ்ரீநகரில் ஷியா பிரிவினர் போராட்டம்: மாஜி முதல்வர் பிரசாரம் ஒத்திவைப்பு

கேரளாவில் கைது செய்யப்பட்ட ரவுடி எஸ்டேட் மணி வேலூர் சிறையில் அடைப்பு