காரைக்காலில் கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் அலையில் சிக்கி மாயம்: ஒருவர் உயிரிழப்பு

காரைக்கால்: காரைக்காலில் கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் அலையில் சிக்கி மாயமாகியுள்ளனர். 5 மாணவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளார். 2 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் மாயமான 2 மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காரைக்கால் கடற்கரையில் முகத்துவாரம் பகுதியில் கடலில் குளித்து சிலர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் அபாயகரமான பகுதி என்று பதாகைகளை வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று காரைக்கால் வேலை நாள் என்பதால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

இதனையடுத்து தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறுவதால் தஞ்சை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் வணிகவியல் 3ம் ஆண்டு பயிலும் 13 மாணவ, மாணவிகள் காரைக்கால் கடற்கரைக்கு சுற்றுலா வந்துள்ளனர். மாணவ, மாணவிகள் கடலில் குளித்து விளையாடி மகிழ்ந்துள்ளனர்.

அப்போது கடல் அலையின் சீற்றத்தால் 2 மாணவிகள் கடலில் இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அருகிலிருந்த 4 மாணவர்கள் கடலில் இழுத்து செல்லப்பட்ட மாணவிகளை மீட்க முயன்றுள்ளனர். அவர்களில் 2 மாணவர்கள் கடலில் இழுத்து செல்லப்பட்டனர். கடலில் இழுத்து செல்லப்பட்ட மாணவி ஹேமா மாலினி சடலமாக மீட்கப்பட்டார்.

மாணவிகளை மீட்க சென்ற ஜெகதீஷ், அபினேஷ் ஆகிய மாணவர்கள் மாயமான நிலையில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காவல் கண்காணிப்பாளர், தீயணைப்புத்துறையினர், மீனவர்கள் ஆகியோர் மாயமான மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலாவிற்கு வந்த மாணவர்கள் கடல் அலையில் சிக்கி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு