காரைக்கால், மதகடி பகுதியில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் காவலர் குடியிருப்பு

*இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட கோரிக்கை

காரைக்கால் : காரைக்கால் மதகடி பகுதியில் சமூக விரோதிகளின் கூடாரமாக காவலர் குடியிருப்பு மாறி வருகிறது. இதை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரைக்கால், மதகடி பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் காவலர்கள் குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டது. இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதற்காக கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் காரைக்கால் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மட்டுமின்றி புதுச்சேரி, மாகி மற்றும் ஏனாம் பிராந்தியங்களை சேர்ந்த காவலர்கள் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வந்தனர்.

காவலர் குடியிருப்புகட்டிடம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆனதால், கட்டிடத்தின் மேற்பகுதியில் காரைகள் இடிந்து விழுவதும், கட்டிடங்கள் சேதமாவதும் தொடர் கதையாகி நிலவி வந்தது. இதற்கிடையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காவலர் ஒருவர் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தில் இருந்து காரைகள் பெயர்ந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லாமல் தப்பினர்.

இதற்கிடையில் கட்டிடம் பழுது காரணமாக அக்கட்டிடத்தில் இருந்த காவலர்கள் அனைவரும் பூவம், நெடுங்காடு, திருப்பட்டினம் மற்றும் கோட்டுச்சேரியில் உள்ள காவலர் குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டனர். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரும்பாலான காவலர்கள் தற்போது சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு, பிற பிராந்தியங்களும் சேர்ந்த காவலர்கள் அவரவர் பகுதிகளுக்கு மாற்றலாகி சென்று விட்டதால் தற்போது மதகடியில் உள்ள காவலர்கள் குடியிருப்பு வளாகத்தில் இக்கட்டிடத்தில் யாரும் வசிப்பதில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கேட்பாரற்று கிடப்பதால் தற்போது காவலர் குடியிருப்பு வளாகத்தில் சமூக விரோதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் அங்கு வரும் இளைஞர்கள் மற்றும் புள்ளிக்கோ கும்பல்கள் வயிறு முட்ட குடித்துவிட்டு, அங்கையே பாட்டில்களை உடைத்து கட்டிடத்தின் உள்ளேயும், அருகில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் வீசி வருகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அரசு நடவடிக்கை எடுத்து, பயனற்ற கிடக்கும் கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு ஒப்பந்ததாரர் நல சங்க அமைப்பாளர் சுரேஷ் கூறியதாவது:-காரைக்காலில் பணிபுரியும் காவலர்களின் வசதிக்காக மதகடியில் குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் சிதிலமடைந்ததால் அங்கு தங்கி இருந்த காவலர்களை அருகே இருக்கும் மற்ற குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டனர். ஆனால் நான்கு வருடங்களாக பயன்படுத்தப்படாமல் உள்ள இந்த கைவிடப்பட்ட குடியிருப்பு வளாகத்தை மறு சீரமைக்கவோ அல்லது இடித்து விட்டு மீண்டும் புதிய காவலர் குடியிருப்பு வளாகத்தை கட்ட அரசு முயற்சி எடுக்கவில்லை. இதனால் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி கஞ்சா புழக்கம் அதிகமாகி, பாலியல் தொழில்கள் நடைபெறும் பகுதியாகவும்,மது கூடமாகவும் மாறி உள்ளது.

எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, கேட்பாரற்று கிடக்கும் கைவிடப்பட்ட காவலர் குடியிருப்பு வளாகத்தை சீரமைத்து பயன்படுத்த வேண்டும். அதே போல் காரைக்கால் மாவட்டத்தில் அரசு நிலங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து மறுசீரமைப்பு அல்லது புதிய கட்டிடம் காட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி