தொடர் விடுமுறை எதிரொலி: கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்


கன்னியாகுமரி: தொடர் விடுமுறை காரணமாக இன்று கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். கடலில் குளித்து அலையுடன் விளையாடியதோடு படகு சவாரியும் செய்து மகிழ்ந்தனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் பொழுதை கழிக்க தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் குடும்பம் குடும்பமாக வருகின்றனர். அந்த வகையில் கடந்த 15ம் தேதி சுதந்திர தின விடுமுறையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்ட நிலையில் 4 நாட்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) விடுமுறை தினம். அதேபோல் 26ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை. எனவே 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வெளியூரை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று காலை முதலே கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்தனர். காலையில் சூரிய உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் படம்பிடித்தனர். கடற்கரை மற்றும் பாறையில் நின்றவாறு தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சிலர் கடலில் இறங்கி குளித்து கும்மாளமிட்டனர்.

பின்னர் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டனர். முன்னதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். படகு சவாரி செய்த பிறகு பகவதியம்மன் கோயில் மற்றும் பல இடங்களுக்கு சுற்றிப்பார்த்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் கன்னியாகுமரி கடற்கரை இன்று களைகட்டியது.

Related posts

பொங்கல் பண்டிகை: 3 நிமிடங்களில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்

RGBSI நிறுவனத்துடன் ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மயிலாப்பூரில் சிறப்பு முகாம்