கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 21,306 பேர் பத்திரமாக மீட்பு

சென்னை: வரலாறு காணாத வெள்ளத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால் வெளியேற முடியாமல் உயிருக்கு போராடிய 21,306 பேரை பத்திரமாக மீட்டு நிவாரண முகாமில் தங்கவைத்த, காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் வரலாறு காணாத மழை பெய்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கடந்த 17ம் தேதியே தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோர் 4 மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினர்.

அதன்படி மாநில பேரிடரில் பயிற்சி ெபற்ற அனைத்து காவலர்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டது. சென்னையில் இருந்து முதற்கட்டமாக கடந்த 17ம் தேதியே 3 தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுக்கள் திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக சென்னையில் மருதம் வளாகத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை: வெள்ள மீட்பு பணிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாநகரத்திற்கு போலீஸ் கமிஷனர் மகேஸ்வரி, திருநெல்வேலிக்கு டிஐஜி பிரவேஷ்குமார், தென்காசிக்கு டிஐஜி அபிநாவ் குமார், தூத்துக்குடிக்கு டிஐஜி துரை ஆகியோர் நியமிக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் தூத்துக்குடி மற்றும் நெல்லைக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் போலீசாரை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டார்.

4 மாவட்டங்களுக்கு கூடுதலாக 15 தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுக்களை சேர்ந்த 400 பேர் அனுப்பிவைக்கப்பட்டது. மேலும், 10 தேசிய பேரிடம் மீட்பு குழுவை சேர்ந்த 250 பேர் வெள்ள மீட்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீட்பு பணிக்கு கூடுதலாக எஸ்பிக்கள் அரிகிரன் பிரசாத், ராஜன், சரவணன் ஆகிய காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தாமிரபரணி ஆற்றியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும், அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதல் எஸ்பி ஒருவர் தலைமையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சிறப்பு வெள்ள கட்டுப்பாட்டறை தொடங்கி செயல்படுத்தப்பட்டது.

மீட்பு பணிகள்:

மீட்பு பணிக்காக தமிழ்நாடு கடலோர காவல் படையின் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பெற்ற 100 காவலர்கள் உட்பட 316 காவர்கள் தேவையான மீட்பு உபகரணங்களுடன் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் கிராமத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு மரத்தில் ஏறிய உயிருக்கு போராடிய 2 பேரை பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த உதவி ஆய்வாளர் அர்ஜூனன் தலைமையிலான குழுவினர் ெஹலிகாப்டர் உதவியுடன் மீட்டனர்.

தூத்துக்குடி காந்தி நகர் முள்ளக்காடு பகுதியை சேர்ந்த கற்பகவள்ளி என்ற கர்ப்பிணி பெண் பிரசவ வலியுடன் இருக்கும் போது 4 திருநங்கைகள் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் போது வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். மாநில பேரிடர் குழுவை சேர்ந்தவர்கள் கர்ப்பிணி பெண்ணை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது. பேரிடர் மீட்பு பணிக்கு சென்ற போது 58 காவலர்கள் வாகனத்துடன் வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்டனர். செல்போன் தொடர்பு ஏதும் கிடைக்காத நிலையில் 2 நாட்கள் தண்ணீரில் உணவு கிடைக்காமல் இருந்த 58 காவர்களையும் வேறு பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

படகுகள் மூலம் பொதுமக்கள் மீட்பு:

துத்தாலம்குறிச்சி, ஆழிகுடி, மேலூர் பகுதிகளில் வெள்ள நீரில் சிக்கி வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவிர்த்த ஆயிரக்கணக்கான பொதுமக்களை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் நள்ளிரவில் தங்களது உயிரை பனையம் வைத்து படகுகள் மூலம் பத்திரமாக மீட்டனர். சிறப்பான பணிகள்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளியேற முடியாமல் தவித்தவர்களை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் கயிறுகள் மூலம் பத்திரமாக மீட்டனர். மீட்பு பணியின் போது பொதுமக்கள் காவலர்களை கண்ணீர் மல்க தெய்வங்கள் போல் தொட்டு வணங்கிய காட்சிகளும் அரங்கேறியது.

அந்த வகையில் வெள்ளம் பாதித்த திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி அகிய 4 மாவட்டங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர், கடலோர பாதுகாப்பு குழுமம் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்த காவலர்கள் பேரிடர் மீட்பு குழுவினர் கடந்த 17ம் ேததியில் இருந்து தண்ணீர் வடியும் வரை இரவு பகல் பாராமல் தங்களது உயிர்களையும், தங்களது குடும்பம் மற்றும் குழந்தைகள் தனியாக விட்டுவிட்டு மீட்பு பணி மேற்கொண்ட காவலர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் அதிகாரிகள், பொதுநல அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது