கன்னியாகுமரியில் மீண்டும் கடல்நீர்மட்டம் தாழ்வு: படகு போக்குவரத்து தாமதம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் 3வது நாளாக இன்றும் கடல்நீர்மட்டம் தாழ்வு காரணமாக 3 மணிநேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி வருகின்றவர்கள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பதோடு, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு சேவை நடத்தப்படுகின்றது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக காலை நேரத்தில் கடல் நீர்மட்டம் திடீரென்று தாழ்ந்துபோனது. இதனால் எப்போதும் 8 மணிக்கு தொடங்க இருந்த படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. இந்தநிலையில் இன்றும் காலை நேரத்தில் திடீரென கடல்நீர்மட்டம் குறைந்தது. இதையடுத்து படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இதனால் படகு சவாரிக்கு டிக்கெட் எடுப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகத்தில் கால்கடுக்க காத்து நின்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். அந்த அலுவலகத்தின் கேட் பூட்டப்பட்டது. இதுகுறித்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவல அதிகாரிகள் கூறுகையில், இன்றும் கடல்நீர்மட்டம் தாழ்வு காரணமாக 8 மணிக்கு தொடங்க இருந்த படகு போக்குவரத்து 3 மணிநேரம் தாமதமாக 11 மணிக்கு தொடங்கப்பட உள்ளதாக கூறினர்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு