கன்னியாகுமரி-மும்பை சிறப்பு ரயில் மீண்டும் புறக்கணிக்கப்படும் குழித்துறை ரயில் நிலையம்

*நிறுத்தம் அறிவிக்க பயணிகள் கோரிக்கை

மார்த்தாண்டம் : கன்னியாகுமரி-மும்பை இடையே ரயில்வே அறிவித்துள்ள சிறப்பு ரயிலுக்கு குழித்துறை ரயில் நிலையத்தில் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை 2வது பெரிய ரயில் நிலையம் ஆகும். இதன் வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி – ஜாம்நகர் (வாரம் இருமுறை), நாகர்கோவில்- காந்திதாம் (வாராந்திர ரயில்), கன்னியாகுமரி – திப்ருகர் (வாரம் இருமுறை), நாகர்கோவில்- ஷாலிமார் (வாராந்திர ரயில்), திருநெல்வேலி- காந்திதாம் ஹம்சஃபார் (வாராந்திர ரயில்) ஆகிய ரயில்கள் நிறுத்தம் இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி- ஜாம்நகர், நாகர்கோவில் – காந்திதாம் மற்றும் கன்னியாகுமரி – திப்ருகர் ஆகிய ரயில்களுக்கு மட்டுமாவது குழித்துறையில் நிறுத்தம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் ரயில்வேதுறை திருநெல்வேலி – ஜாம்நகர் ரயிலுக்கு குழித்துறையில் நிறுத்தம் கொடுக்காமல் பாறசாலையில் நிறுத்தம் வழங்கியுள்ளது. இந்த நிலையில் ரயில்வேதுறை தற்போது கன்னியாகுமரியில் இருந்து குழித்துறை ரயில் நிலையம் வழியாக மும்பைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.

இந்த ரயிலுக்கு குழித்துறையில் நிறுத்தம் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு முன்பு இந்த ரயில் கடந்த கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விடுமுறையையொட்டி இயக்கிய போது குழித்துறை நிறுத்தம் அனுமதிக்கப்பட்டது. தற்போது கோடைக்கால விடுமுறையையொட்டி அதே ரயில் மீண்டும் அறிவித்து இயக்கும் போது நிறுத்தம் அனுமதிக்கப்படவில்லை. இந்த ரயிலில் குமரி மாவட்ட பயணிகள் பயணம் செய்ய வேண்டுமானால் நாகர்கோவிலுக்கு வரவேண்டும் அல்லது திருவனந்தபுரம் செல்ல வேண்டும்.

நாகர்கோவிலில் ரயில் நிலையம் வெகுதூரத்தில் உள்ளதால் ஆட்டோ கட்டணம் ரயில் நிலைய கட்டணத்தை விட அதிகமாக இருக்கிறது.குழித்துறையில் நிறுத்தம் இல்லாததால் குமரி மாவட்ட பயணிகளின் வருவாய் திருவனந்தபுரம் ரயில் நிலையத்துக்கு சென்றுவிடுகிறது. குழித்துறை ரயில் நிலையத்தில் மீண்டும் முன்புபோல் நிறுத்தம் அனுமதிக்க வேண்டும். கன்னியாகுமரி – மும்பை வாராந்திர சிறப்பு ரயிலுக்கு நிறுத்தம் அறிவிக்காமல் குழித்துறை ரயில் நிலையத்தை வேண்டும் என்றே ரயில்வேத்துறை புறக்கணிக்கப்பதாக குழித்துறை ரயில் பயணிகள் சங்க செயலாளர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

சிவகங்கையில் ஐம்பொன் சிலை திருடிய பெண் கைது..!!

பெலிக்ஸ் ஜெரால்டு வழக்கு விவகாரம்: ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட் தடை

கார்கேவை சந்தித்துவிட்டு காங்கிரஸில் இணைந்த இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா!!