கன்னியாகுமரி-சென்னைக்கு ‘முத்தமிழ்த்தேர்’ ஊர்தி பயணம்: 4ம் தேதி தொடங்குகிறது

நாகர்கோவில்: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் ‘முத்தமிழ்த்தேர்’ அலங்கார ஊர்தி கன்னியாகுமரியில் இருந்து வரும் 4ம் தேதி தொடங்கி 29 மாவட்டங்கள் வழியாக சென்னை செல்கிறது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் எழுத்தாளர்-கலைஞர் குழு சார்பில் ‘முத்தமிழ்த்தேர்’ அலங்கார ஊர்தி பயணம் வரும் 4ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ‘முத்தமிழ்த்தேர்’ பயணிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 100 மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் எழுத்தாளர்- கலைஞர் குழுவின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ் தேர் தொடக்க விழா வரும் 4ம் தேதி (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே முக்கோண பூங்காவில் நடைபெற உள்ளது. குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வரவேற்கிறார். கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ்தேரினை தொடக்கி வைத்து தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசுகிறார். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி மற்றும் எம்எல்ஏக்கள் விழாவில் கலந்துகொள்கின்றனர்.

29 மாவட்டங்கள் விவரம்: நவம்பர் 4ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி 5ம் தேதி திருநெல்வேலி, 6ம் தேதி தூத்துக்குடி, 7ம் தேதி விருதுநகர், 8ம் தேதி தேனி, 9, 10 தேதிகளில் மதுரை, 11ம் தேதி ராமநாதபுரம், 13ல் புதுக்கோட்டை, 14ல் சிவகங்கை, 15ல் நாகப்பட்டினம் செல்கிறது. 16ம் தேதி மயிலாடுதுறை, 17ம் தேதி திருவாரூர், 18ம் தேதி தஞ்சாவூர், 19ல் திருச்சி, 20ல் திண்டுக்கல், 21ல் கோவை, 22ல் திருப்பூர், 23ல் ஈரோடு, 24ல் கரூர், 25ம் தேதி நாமக்கல், 26ம் தேதி சேலம் செல்லும். 27 தருமபுரி, 28ம் தேதி கிருஷ்ணகிரி, 29ல் திருப்பத்தூர், 30ம் தேதி திருவண்ணாமலை, டிசம்பர் 1ம் தேதி விழுப்புரம், 2ம் தேதி செங்கல்பட்டு, டிசம்பர் 3 காஞ்சிபுரம் சென்று டிசம்பர் 4ம் தேதி சென்னை சென்றடைகிறது.

Related posts

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உரை

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்