கன்னியாகுமரி பஸ் டெப்போ அருகே தீ: பெட்ரோல் பங்க் தப்பியது

நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே பஸ் டெப்போ அருகே ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி பஸ் நிலையத்தையொட்டி, போக்குவரத்து கழக பணிமனையும் உள்ளது. இந்த இந்த பணிமனையொட்டி உள்ள பகுதிகளில் புதர் மண்டி உள்ளன. இன்று அதிகாலை 2 மணியளவில் பணிமனைக்கு அருகில் உள்ள புதரில் திடீரென தீ பிடித்தது. காற்றும் வேகமாக வீசியது.

தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து சிறிது தொலைவில் தான், போக்குவரத்து கழக பணிமனை சர்வீஸ் மையம், பெட்ரோல் பங்க் உள்ளது. தீ வேகமாக பிடிக்க தொடங்கியதால், பெட்ரோல் பங்க்கிற்கும் பரவும் அபாய நிலை ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
குமரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார் உத்தரவின் பேரில், நிலைய அலுவலர் பென்னட் தம்பி மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.

சரியான நேரத்தில் கவனித்து தகவல் கூறியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. குப்பையில் வேண்டுமென்றே மர்ம நபர்கள் தீ வைத்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த இரு நாட்களுக்கு முன், கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பேரூராட்சி சார்பில் குப்பை கொட்டும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்ததால், 150 தற்காலிக கடைகள் தப்பின. இந்த தீ விபத்துக்கும் நாச வேலையே காரணம் என கூறப்பட்டது. கன்னியாகுமரியில் தொடரும் தீ விபத்து சம்பவங்கள் பரபரப்பை உண்டாக்கி உள்ளன.

Related posts

கூத்துப் பட்டறை அறங்காவலர் நடேஷ் காலமானார்

ம.நீ.ம. தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு: காவல் ஆணையர் விளக்கம்