கண்ணூர் பல்கலைகழக துணைவேந்தர் விவகாரம்; கேரள மாநில அரசின் மறுநியமன ஆணை ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைகழகத்தில் துணைவேந்தராக இருந்தவர் கோபிநாத் ரவீந்திரன். இவரின் பதவிகாலம் முடிந்த நிலையில் அவரை மறுநியமனம் செய்து கேரள அரசு கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆணை பிறப்பித்தது.

கேரள அரசின் இந்த செயல்பாட்டை எதிர்த்தும், 60 வயது என்ற வரம்பை கடந்த ஒருவர் துணைவேந்தராக மறு நியமனம் செய்ததை எதிர்த்தும், கேரள ஆளுநர் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த கேரள உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதியும், அதனை தொடர்ந்து விசாரித்த டிவிசன் அமர்வும் கண்ணூர் பல்கலைகழகத்துக்கு துணை வேந்தரை நியமித்த கேரள அரசின் ஆணை செல்லும் என உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது இதையடுத்து வழக்கு பல இந் வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில்,‘‘பல்கலைக்கழக துணைவேந்தரின் மறுநியமனத்துக்கு வயது வரம்பு ஒரு பொருட்டல்ல என்ற கேரள அரசின் வாதம் ஏற்கப்படுகிறது.

அதேவேளையில் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கோபிநாத் ரவீந்திரனை கேரள அரசு நியமித்து பிறப்பித்த ஆணையை ரத்து செய்யப்படுகிறது. ஏனெனில் துணைவேந்தர் நியமனத்தில் கேரள அரசின் தேவையற்ற அதீத தலையீடு நியமனத்தை பாதித்துள்ளது.

குறிப்பாக இந்த விசயத்தில் பல்கலைகழக வேந்தரான ஆளுநர், முனைவர் கோபிநாத் ரவீந்திரனையே துணைவேந்தராக நியமித்து ஒரு ஆணை பிறப்பித்துள்ளார். ஆனால் வேந்தரின் ஆணையை ஓரங்கட்டும் விதமாக கேரள அரசு தேவையில்லாமல் தலையிட்டு மறுநியமன ஆணையை பிறப்பித்துள்ளது. இது தேவையில்லாத செயலாகும்.

மேலும் பல்கலைகழக துணைவேந்தர் நியமனம் செய்வது என்பது வேந்தரின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அவர் மட்டுமே துணைவேந்தரை நியமனம் செய்ய முடியும். துணைவேந்தர் நியமன விவகாரத்தில் எந்தவொரு அதிகாரியும் தலையிட்டால், அது முற்றிலும் சட்டவிரோதமானது ஆகும். எனவே கோபிநாத் ரவீந்திரனை துணைவேந்தராக நியமித்த கேரள அரசின் ஆணை ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்தனர்.

Related posts

முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: சுற்றுலாத்துறை நடவடிக்கை

காவல் நிலையத்தில் குவிந்த பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

கோவளத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி: 360 மாணவிகள் பங்கேற்பு