காணிப்பாக்கத்தில் 9ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம் வரசித்தி விநாயகர் குதிரை வாகனத்தில் வீதியுலா

*ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சித்தூர் : காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் நேற்று 9ம் நாள் பிரமோற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி வரசித்தி விநாயகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து அருள்பாலித்தார்.சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர். இக்கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் பிரமோற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, இம்மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னிட்டு கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து கோயில்களிலும் விநாயகர் சதுர்த்திக்கு 10 நாட்களுக்கு முன்பாக பிரமோற்சவம் தொடங்கி விநாயகர் சதுர்த்தி அன்று நிறைவுபெறும். ஆனால் காணிப்பாக்கம் வர சித்தி விநாயகர் கோயிலில் மட்டும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி 21 நாட்கள் நடைபெறும். அப்போது, ஒவ்வொரு வம்சத்தை சேர்ந்த மக்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்திற்கு பூஜை செய்து தொடங்கி வைப்பது வழக்கம்.

இந்நிலையில், பிரமோற்சவத்தின் 9ம் நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மாலை பலிஜ குல வம்சத்தினர் அஸ்வா(குதிரை) வாகனத்திற்கு பூஜை செய்து தொடங்கி வைத்தனர். அஸ்வா வாகனத்தில் விநாயகர் நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் ஆர்த்தி எடுத்து தேங்காய் உடைத்து விநாயகரை வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு குளிர்பான, குடிநீர் மற்றும் அன்னதானம் உள்ளிட்டவை கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. அதேபோல் காவல்துறை சார்பில் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகரம் முழுவதும் ஆங்காங்கே சிசி கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரமோற்சவத்தில் 10ம் நாளான இன்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெறும். தொடர்ந்து துவஜ அவரோகனம் கொடி இறக்கம் ஏகாந்த சேவை வடாயத்து உற்சவம் நடைபெறும்.

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்