காணிப்பாக்கத்தில் பிரமோற்சவத்தின் 8ம் நாளான நேற்று வரசித்தி விநாயகர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

*ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

சித்தூர் : காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் பிரமோற்வசவத்தின் 8ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இக்கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

இந்தியாவில் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்திக்கு முன்பாகவே பிரமோற்சவம் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்று விநாயகர் சதுர்த்தி அன்று நிறைவு பெறும். ஆனால் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் மட்டும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மறுநாள் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி 21 நாட்கள் நடைபெறும். இதில், ஒவ்வொரு வம்சத்தினரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்திற்கு பூஜை செய்து வாகனத்தை ஊர்வலமாக தொடங்கி வைப்பது வழக்கம்.

அதன்படி, காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் பிரமோற்சவம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரமோற்சவத்தின் 8ம் நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, மகா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. அப்போது வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க பூஜை செய்து தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

அசைந்தாடி வந்த தேரில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தி முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். அதைத்தொடர்ந்து, பிரமோற்சவத்தின் 8வது நாளான இன்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை அஸ்வா (குதிரை) வாகனத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

இந்த அஸ்வா (குதிரை) வாகனத்தை பலிஜ குல வம்சத்தினர் வாகனத்திற்கு பூஜை செய்து தொடங்கி வைக்க உள்ளனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. அதேபோல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் குளிர் பானம், தண்ணீர் மற்றும் மோர் அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. பிரமோற்வசம் முன்னிட்டு காணிப்பாக்கம் நகரம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே போல் நகரம் முழுவதும் ஆங்காங்கே சி சி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Related posts

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நடிகர் பார்த்திபனிடம் ரூ.42 லட்சம் சுருட்டல்: கோவை ஸ்டூடியோ அதிபர் மீது வழக்கு

ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் எனக்கூறி ரூ.75 லட்சம் மோசடி போலீஸ் ஏட்டு கைது