கன்றுக்குட்டிகளை எளிதாக பராமரிக்கலாம்!

இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற சொற்கள் இப்போது அதிகமாக புழக்கத்திற்கு வர ஆரம்பித்து இருக்கின்றன. தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்கள் கூட இப்போது நாட்டு மாடு, கோழி, ஆடு வளர்ப்புக்கு வந்திருக்கிறார்கள். இதில் பலர் மருத்துவர்களின் ஆலோசனையைக் கேட்டு கருவுற்ற பசுக்களுக்கு கலப்புத்தீவனம், அடர்தீவனம் கொடுத்து பராமரித்து வருகிறார்கள். இவற்றை உட்கொள்ளும் சினைப் பசுக்கள் நல்ல ஊட்டம் பெற்று, தரமான கன்றுக்குட்டிகளை ஈனுகின்றன. பெரும்பாலான பசுக்கள் கன்று ஈன்றவுடன் அவைகளே தமது கன்றுகளை சுத்தம் செய்துவிடுகின்றன. அவ்வாறு பசுக்கள் தங்கள் கன்றுகளை சுத்தம் செய்யத் தவறிவிட்டால் கன்றுகளை சுத்தம் செய்வதற்கு விபரம் தெரிந்தவர்களை நாட வேண்டி இருக்கிறது. இந்த சுத்தம் செய்யும் பணியை எல்லோரும் செய்யலாம். அதற்கு சில டிப்ஸ் இருக்கிறது. முயற்சி செய்யுங்கள்!

பசுக்கள் கன்றுக் குட்டியை ஈன்றவுடன் கன்றின் வாய் மற்றும் மூக்கில் இருக்கும் சளி போன்ற நீரை சுத்தம் செய்ய வேண்டும். தாய்ப்பசுக்கள் கன்றுகளின் மேல் இருக்கும் ஈரத்தை நாவினால் சுத்தம் செய்யவில்லை என்றால் ஈரமற்ற துணி கொண்டு மாடு வளர்ப்பவர்களே சுத்தம் செய்து கொள்ளலாம். சில கன்றுகள் சுவாசிக்க சிரமப்படும். அப்போது கன்றின் நெஞ்சிலும், வயிற்றிலும் கையினால் அழுத்திவிட்டு கன்றை எளிதாக சுவாசிக்க வைக்கலாம். தொப்புள் கொடியை கன்றின் வயிற்றில் இருந்து 3 செ.மீட்டரில் இருந்து 5 செ.மீ நீளம் விட்டு அறுத்து டிஞ்சர் தடவி முடிந்துவிட வேண்டும்.

கன்றுக்குட்டிகள் நடக்க முடியாமல் சிரமப்பட்டால் அவற்றைத் தூக்கிக் கொண்டு போய் பசுவிடம் பால் குடிக்கச் செய்ய வேண்டும். இதற்கு முன்பு பசுவின் காம்பினை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் கன்றுக்குட்டிகளின் வயிற்றில் கிருமிகள் செல்ல அதிகம் வாய்ப்பு இருக்கும். இதன்மூலம் கன்றுக் குட்டிகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும். ஒரு வாரம் வரை தாய்ப்பசுவையும் கன்றுக் குட்டியையும் தொழுவத்தில் வைக்காமல் தனியாக கட்டி வைக்க வேண்டும். குளிர் காலமாக இருந்தால் கன்று படுக்கும் இடத்தில் கோணிப்பை அல்லது பழைய துணிகளை போட வேண்டும். முதல் ஒரு மாதம் வரை குடற்புழு, வயிற்றுப்போக்கு என்று கன்றுகளுக்கு பல பிரச்சினைகள் வரக்கூடும். இதனால் உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கன்றுக் குட்டிகளை வெதுவெதுப்பான இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் கன்றுக் குட்டிகளுக்கு தவறாமல் குடற்புழு நீக்க மருந்து கொடுப்பது அவசியம்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு