காஞ்சிபுரத்தில் பெண் காவலரை கத்தியால் குத்திய கணவர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சாலை தெரு பகுதியில் திங்கட்கிழமை பட்டப்பகலில் பெண் காவலரை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான வழக்கில் 24 மணி நேரத்தில், அவரின் கணவரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் டில்லிராணி (33). இவர், விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் மேகநாதன் கணினி உதிரிபாகங்கள் விற்பனையாளராக இருந்து வருகிறார். இவர்களுக்கு சுதர்ஷினி (7) என்ற மகளும் சந்திரசேகர் (3) என்ற மகனும் உள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து கேட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டில்லிராணி நேற்று முன்தினம் பணிமுடித்து காஞ்சிபுரம் சாலை தெரு பகுதியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த அவரின் கணவர் மேகநாதன், டில்லிராணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் மேகநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டில்லிராணியை இடது கை உள்ளிட்ட பல இடங்களில் குத்தி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பலத்த காயமடைந்த டில்லிராணியை அங்கிருந்தவர்கள் மீட்ட, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கணவர் மேகநாதனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். மேகநாதனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, திங்கட்கிழமை காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு சென்று, அங்கிருந்து புதுச்சேரி சென்றது தெரியவந்தது. எனவே, தனிப்படை போலீசார் அவரை பின் தொடர்ந்து சென்றனர். இந்நிலையில், மேகநாதனை கைது செய்தனர். தொடர்ந்து மேகநாதனை சிவகாஞ்சி போலீசார் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

ஆணவ குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்: திருமாவளவன் வலியுறுத்தல்

பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு