காஞ்சிபுரம் மாவட்ட குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.98,396 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்விமோகன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 380 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பிலான திருமண உதவித்தொகைக்கான தங்க நாணயமும், 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.53 ஆயிரத்து,396 மதிப்பிலான திறன் பேசிகளும் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்