காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட அலுவலர்களுக்கு பயிற்சி

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்களில் மனுக்கள் பெறும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தில் நகர்புற பகுதிகளில் முதற்கட்டமாக மாநகராட்சியில் 8 முகாம், நகராட்சியில் 4 முகாம்கள், பேரூராட்சியில் 3 முகாம்கள், நகர்புறத்தினை ஒட்டியுள்ள கிராம பஞ்சாயத்துகளில் 15 முகாம்கள் என மொத்தம் 30 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, ஊராட்சி பகுதிகளில் இரண்டாம் கட்டமாக முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இம்முகாம் வரும் (11.7.2024) அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம், கோவூர் ஊராட்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் முகாம் நடத்தப்படவுள்ளது. மேலும், 256 கிராம ஊராட்சிகளில் 54 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாம்கள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில், முதல் நிலை அலுவலர்களுடன் 27.6.2024 அன்று நடைப்பெற்றது.

அதனைத்தொடர்ந்து முகாம்களில் மனுக்களை பெறும் அலுவலர்களுக்கு 28.6.2024 மற்றும் 2.7.2024 ஆகிய நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. ஊராட்சி பகுதிகளில் 11.7.2024 முதல் 22.8.2024 வரை 54 முகாம்கள் 256 கிராம ஊராட்சிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இம்முகாம்களை பயன்படுத்தி உரிய ஆவணங்களுடன் மனு செய்து பயன் அடையுமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சத்யா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை