காஞ்சி மாநகராட்சியில் சாலையில் சுற்றி திரிந்த 50 மாடுகள் பிடிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை பகுதிகளில் விபத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தலாக சுற்றி வந்த 50க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் அவற்றை மாநகராட்சி பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். தமிழகம் முழுவதிலும் மாநில-தேசிய நெடுஞ்சாலைகளில் ஏராளமான கால்நடைகள் சுற்றி திரிவதால், அங்கு இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலை விபத்துகளில் சிக்குகின்றனர். இதனால் அவர்களில் சிலருக்கு உடல் உறுப்புகள் இழப்பு மற்றும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. பிடிபடும் மாடுகளின் உரிமையாளர்கள்மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரித்து வருகிறது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய ஒரு சிறுமியை சாலையில் சுற்றி திரிந்த பசுமாடு பந்தாடி, தூக்கி வீசி படுகாயப்படுத்தியது. தற்போது அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி பகுதி சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளைப் பிடித்து, சம்பந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள்மீது வழக்குப்பதிவு செய்து, கடும் அபராதம் விதிக்கும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில், காஞ்சிபுரம் வட்டாட்சியர் புவனேஸ்வரன், கால்நடை மருத்துவர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோரை கொண்ட குழு நேற்று காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதி சாலைகளில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிந்த 50க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் நாய்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த கால்நடைகளை பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி சாலை பகுதிகளில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள்மீது வழக்குப்பதிவு செய்து கடும் அபராதம் விதிக்கப்படும். இதே நிலை நீடித்தால், சம்பந்தப்பட்ட நபர்களின்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related posts

கியூட் தேர்வு முடிவு தாமதம்: என்டிஏ மீது காங். சாடல்

கேரளாவில் நகரசபை அலுவலகத்தில் ஊழியர்களின் ரீல்ஸ் வீடியோ: விளக்கம் கேட்டு நோட்டீஸ்

ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது: வெளிநடப்புக்கு பின் கார்கே விமர்சனம்