காஞ்சி நகரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதியிலுள்ள நகரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில்,  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதி, பேருந்து நிலையம் அருகே நகரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில், கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதுப்பிக்கப்பட்டு கடந்த 18ம்தேதி, சிவாச்சாரியார்கள் தலைமையில் யாகசாலை பூஜைகள் கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது.

இதனையடுத்து, கடந்த 19ம்தேதி நவக்கிரக ஹோமம், தனபூஜையும், 20ம்தேதி மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் இருந்து ஸ்ரீ நகரீஸ்வரர் கோயிலுக்கு சிவாச்சாரியார்களை அழைத்து வரும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. இக்கோயிலில், நான்காம் நாளான நேற்று அதிகாலை ஊர்வலமாக மேள தாளங்கள் முழங்க கலசங்களில் புனிதநீர் கொண்டுவரப்பட்டு, மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிவாச்சாரியார்கள் மூலம் புனிதநீர் ஊற்றி மகா குப்பாபிஷேகம் விழா விமரிசையாக நடைபெற்றது.

அப்போது, அனைத்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வஜ்ரவேலு, விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Related posts

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு