காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை போட்டிகளில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான, முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு தொகை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.காஞ்சிபுரம் மாவட்டம், அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற 1764 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.42 லட்சத்து, 08 ஆயிரம் மதிப்பிலான பரிசு தொகைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: விளையாட்டு வாழ்வின் பல முக்கிய அம்சங்களை மேம்படுத்த உதவுகிறது. விளையாட்டு ஒரு மனிதனை ஒழுக்கத்துடனும் ஆரோக்கியமாகவும், ஆக்கத்திறனுடனும், உருவாக்கி வாழ்வில் எந்த கடினமான சூழ்நிலையையும் எளிதில் எதிர்கொள்ளும் ஆற்றலையும் வழங்குகிறது. விளையாட்டு, குழுவாகப் பணியாற்றும் திறனை வளர்த்து அவர்களுக்கு தலைமைப் பண்புகளை வழங்குகிறது. விளையாட்டுப் போட்டிகள் இலக்கை அடைவதற்கான ஊக்கம், உறுதிப்பாட்டை வெளிப்படுத்துதல், கற்பனை திறன் மற்றும் சவால்களை சமாளிப்பதற்கான விடாமுயற்சி ஆகியவற்றை அளித்து கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை வெற்றிக்கான அதிக வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதை புரிந்து கொள்ளச் செய்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், 1500 பேர் பார்க்கக்கூடிய கேலரி, அலுவலகம், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உடை மாற்றும் அறை, கால்பந்து மைதானம், 400மீ ஓடுதளம், வாலிபால் மைதானம் மற்றும் கூடைப்பந்து மைதானம் போன்ற விளையாட்டு மைதானங்கள் ரூ.15 கோடியே 65 லட்சத்தில் புதியதாக அமைக்கப்பட்டு, எண்ணற்ற மாணவர்கள் பயிற்சி செய்து தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் சாதனை படைத்து வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் அனைவரும் விளையாடுவதற்கு ஏற்றார்போல் 5 பிரிவாக பள்ளி, கல்லூரி, மாணவ – மாணவிகள், பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலும் நடத்தப்பட்டது. மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி 8 முதல் 28 வரை நடைபெற்றது.

இப்போட்டி 43 வகையான போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.3000, இரண்டாம் பரிசு ரூ.2000, மூன்றாம் பரிசு ரூ.1000, மொத்த ரூ.42 லட்சத்து 08 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது. இதில், 1764 பேர் பயன் அடைவார்கள். தனிநபர் போட்டியில் முதலிடம் பெற்றவர்கள், குழு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஜூன் மாதம் 4வது வாரத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக கலந்து கொள்கின்றனர்.

இவர்களுக்கு போக்குவரத்து செலவு, விளையாட்டு சீருடை, தங்கும் இடம், உணவு போன்றவை வழங்கப்படும். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசு 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆகவே, விளையாட்டு வீரர்கள் தமிழக அரசால் வழங்கப்படும் வாய்ப்புகளை சிறப்பான முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிபெற எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இவ்விழாவில், கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்பி செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றிய குழுத்தலைவர் தேவேந்திரன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழுத்தலைவர் கருணாநிதி, அரசு அலுவலர்கள், வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

அடுத்த 20 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி தான்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு

தமிழகத்தில் ஜூலை 9 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில் ஜூலை 23-க்குள் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு