காஞ்சிபுரம் அருகே வேகவதி ஆற்று தரைப்பாலம் சேதம் 2 கிமீ தூரம் சுற்றி செல்லும் அவலம்: மக்கள் கடும் அவதி; சரி செய்ய கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சேதமடைந்த வேகவதி ஆற்றின் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டு பகுதியில் தாட்டித்தோப்பு மற்றும் முருகன் பட்டு நெசவாளர் குடியிருப்பு உள்ளது. இப்பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். காஞ்சிபுரத்தில் இருந்து இந்த பகுதிக்கு செல்லும் வழியில் வேகவதி ஆற்றில் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதமடைந்தது. இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுக்கு மேலாக தரைப்பாலம் சீரமைக்கப்பட வில்ைல.

கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின்போது வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் தரைப்பாலம் முழுவதுமாக அடித்து செல்லப்பட்டது‌. இதனால் முருகன் காலனி குடியிருப்பு பகுதி மக்கள் மாற்று வழியை பயன்படுத்தி வந்தனர். பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், நெசவாளர்கள் மற்றும் தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வெள்ளப்பெருக்கில் வேகவதி ஆறு தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டபோது மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சாலையை சீரமைத்தனர். சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் வீடுகட்ட கட்டுமான பொருள் எடுத்து செல்லும் லாரிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தரைப்பாலம் பழுதடைந்துள்ளதால் 2 கிமீ தூரம் சுற்றி கொண்டு வரவேண்டிய நிலையுள்ளது. எனவே, மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர், குடியிருப்புவாசிகளின் நலனை கருத்தில் கொண்டு வேகவதி ஆற்றின் தரைபாலத்தை மேம்பாலமாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related posts

தலைவர்கள் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை

முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சித்தூர் மாநகரத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல தடையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு