பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்த கமலா பூஜாரி!

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்தான். என்னதான் பல தொழில்கள் வளர்ந்து நின்றாலும், அனைவருக்கும் சாப்பிட உணவு வேண்டும். அத்தகைய உணவை உற்பத்தி செய்யும் விவசாயத்தொழிலை முதுகெலும்பு என்று நிச்சயம் சொல்லலாம். விவசாயம் செழித்திருக்க பல அறிஞர்களும், முன்னோடி விவசாயிகளும் பல முன்னெடுப்புகளை நிகழ்த்தி இருக்கிறார்கள். அதிலும் நமது பாரம்பரிய விவசாய முறைகளையும், பாரம்பரிய விதைகளையும் மீட்டெடுக்க சிலர் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறார்கள். இந்தியாவில் பாரம்பரிய விவசாயத்திற்காக பாடுபட்ட நம்மாழ்வார், நெல் ஜெயராமன் போன்றோரின் வரிசையில் கமலா பூஜாரிக்கும் முக்கிய இடம் உண்டு. ஒடிசா மாநிலத்தில் உள்ள கோராபுட் பகுதியைச் சேர்ந்தவர்தான் கமலா பூஜாரி. பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர் அழியும் நிலையில் இருந்த நூற்றுக்கும் அதிகமான நெல் ரகங்களைப் பாதுகாத்ததோடு மட்டுமில்லாமல், பல வகையான மஞ்சள், சீரகம் போன்றவற்றையும் பாதுகாத்து வந்தார்.

‘திலி’, ‘மச்சகந்தா’, ‘புலா’ மற்றும் ‘கனாட்டியா’ போன்ற அரிய நெல் வகைகளையும் கமலா பூஜாரி அழியாமல் காப்பாற்றியுள்ளார். இயற்கை விவசாயத்தைப் பெருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பல கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளை குறிப்பாக பெண்களை இயற்கை விவசாயம் பக்கம் திருப்பி இருக்கிறார். அதுபோக, இயற்கை உரங்களின் பயன்பாடு பற்றியும் பல விவசாயிகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதனால் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 2002ல் ஈக்வேட்டர் இனிஷியேட்டிவ் விருது கமலா பூஜாரிக்கு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2019ம் ஆண்டில் விவசாயத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மவிருதும் வழங்கி கவுரவித்து இருக்கிறது.

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட திட்டத்தில் கமலா பூஜாரி ஒரு தலைவராக இருந்துள்ளார். அப்போது (1994ம் ஆண்டு) கோராபுட்டில் அதிக மகசூல் தரக்கூடிய மற்றும் உயர்தர நெல் வகையான ‘கலாஜீரா’ உருவாக்கப்பட்டது. 2018ம் ஆண்டில் ஒடிசா மாநில திட்டமிடல் குழுவில் உறுப்பினராகவும் பங்காற்றி இருக்கிறார் கமலா. 2004ம் ஆண்டில் ஒடிசா அரசாங்கத்தால் சிறந்த விவசாயி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். புவனேஸ்வரில் உள்ள ஒடிசாவின் முதன்மையான விவசாய ஆராய்ச்சி நிறுவனமான ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இந்த விருதை வழங்கியது. இயற்கை விவசாயத்திற்கும், பாரம்பரிய நெல் ரகங்களையும் பரவலாக்கம் செய்த கமலா பூஜாரி கடந்த 21ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவர் நம் நினைவில் என்றும் இருப்பார்.

கமலா பூஜாரி தனது சொந்த மண்ணான கோராபுட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயணித்து, அங்குள்ள பெண்களைச் சந்தித்து ரசாயன உரத்தின் தீமை எடுத்துரைத்தார். அவரது விளக்கத்தினால் விபரம் அறிந்துகொண்ட பெண் விவசாயிகள் ரசாயன உரங்களை மறந்துவிட்டார்கள். முழுக்க முழுக்க இயற்கை வழி விவசாயத்திற்கு வந்துவிட்டார்கள். இதனால் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) கோராபுட் பகுதியை உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விவசாய பாரம்பரியத் தளமாக அறிவித்தது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்