கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் 1,000 படுக்கைகள்: அரசாணை வெளியீடு

சென்னை: கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் உள்ள படுக்கைகளை ஆயிரமாக உயர்த்தி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 240.54 கோடி செலவில் 1,000 படுக்கை வசதியுடன் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

இந்த உயர்சிறப்பு மருத்துவமனையில், இதயவியல் துறை, மூளை நரம்பியல் துறை, கதிர்வீச்சு மற்றும் குறுக்கீட்டு கதிர்வீச்சு துறை, குடல் மற்றும் இரைப்பை மருத்துவத் துறை, நோய் எதிர்ப்பு குருதியியல் துறை, புற்றுநோய் மருத்துவத் துறை, சிறுநீரக மருத்துவத் துறை ஆகிய மருத்துவ உயர் சிறப்பு பிரிவுகளும்; இதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை ஆகிய அறுவை சிகிச்சை உயர்சிறப்பு பிரிவுகள் உட்பட 23 பிரிவுகள் செயல்பட உள்ளது.

இந்த மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவ பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என 757 நபர்களை பணியமர்த்தப்பட உள்ளனர். அதில் 249 பேர் நிரந்தரப் பணியிடத்திலும், 508 பேர் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளனர். இந்த பணி இடங்களுக்கு கீழ்ப்பாக்கம், திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்தும் பணியமர்த்தப்பட உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு