கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியலை விட்டு ராமதாஸ், அன்புமணி விலக தயாரா? எம்எல்ஏக்கள் கார்த்திகேயன், உதயசூரியன் சவால்

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ராமதாஸ், அன்புமணி குற்றச்சாட்டை நிரூபித்தால் பொதுவாழ்வில் இருந்து நாங்கள் விலக தயார். இல்லையென்றால், அவர்கள் விலக தயாரா என திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் உதயசூரியன் சவால் விட்டுள்ளனர். திமுக எம்எல்ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் உதயசூரியன் ஆகியோர் நேற்று பேரவைக்கு வெளியில் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பொய்யான குற்றச்சாட்டையும், அபாண்டமான அறிக்கைகளையும் வெளியிட்டு இறந்தவர்கள் வீட்டில் ஆதாயம் தேடும் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 24 மணி நேரத்தில் மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்த அனைவரும் மாற்றம் செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் அங்கு வந்த அன்புமணி மற்ற மாநிலங்களில் நடக்கும் விஷ சாராய இறப்புக்கு வாய் திறக்காமல் முதல்வர் நடவடிக்கையை பொறுத்துக்கொள்ளாமல் அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எங்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிரூபித்தால் நாங்கள் பொதுவாழ்வில் இருந்து விலகிக்கொள்கிறோம், அப்படி நிரூபிக்கவில்லை என்றால் ராமதாஸ் மற்றும் அன்புமணி பொதுவாழ்வில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலக தயாரா? 37 ஆண்டுகால அரசியல் வாழ்விற்கு குந்தகம் விளைவிக்க நினைக்கிறார்கள். மேலும் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து வருகிறோம்.

மக்கள் யாரும் எங்கள் மீது குற்றம் சாட்டவில்லை அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் அனைவரும் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். தேர்தல் நேரத்தில் அனைத்து வீடுகளிலும் ஸ்டிக்கர் ஒட்டப்படும், அதற்காக அவர் அந்த கட்சியை சார்ந்தவர் என்று கூறிவிட முடியாது. பாமக கூட்டணியில் இருக்கும் பாஜ ஆளும் மாநிலத்தில் இதேபோன்று இறக்கின்றனர். ஆனால் அங்கு இருக்கும் அரசு அதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை, ஆனால் தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அதை பொறுத்துக்கொள்ளாமல் இறந்தவர் இல்லத்திற்கு சென்று அரசியல் செய்து வருகிறார். ராமதாஸ் மற்றும் அன்புமணி மீது மானநஷ்ட வழக்கு தொடுக்க இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு நாளை மாலைக்கு ஒத்திவைப்பு!

வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற வாலிபர் அதிரடி கைது: 28 மாத்திரைகள் பறிமுதல்

உ.பி.யில் ஆன்மிக நிகழ்ச்சி கூட்டநெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழப்பு..!!