கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் மார்க்சிஸ்ட், தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்: பாலகிருஷ்ணன், பிரேமலதா பங்கேற்பு

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தேமுதிக சார்பில் தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பாலகிருஷ்ணன், பிரேமலதா பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய பலியை கண்டித்து கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், ‘விஷ சாராயம் குடித்தது குற்றம் என்றாலும், உயிரிழந்த அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில்தான் தமிழக முதல்வர் நிவாரண உதவி வழங்கி உள்ளார். இதைக்கூட சில அரசியல் கட்சியினர் குறை கூறி வருகின்றனர். எந்த ஆட்சி வந்தாலும் நடைபெறுகிறது.

இதற்கு பின்புலம் உள்ள முக்கிய குற்றவாளிகள் அரசியல் அதிகாரமிக்கவர்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் அவர்களையும் கைது செய்ய வேண்டும். கல்வராயன்மலை, கள்ளச்சாராய மலையாக உள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரியிடம் விசாரிக்க வேண்டும்’ என்றார்.  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தேமுதிக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி பேசுகையில், ‘கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இதுகுறித்து தமிழக ஆளுநரை சந்தித்து தேமுதிக சார்பில் மனு அளிக்கப்படும். இந்த விவகாரத்தில் யார் தொடர்பில் இருந்தாலும் பாரபட்சமின்றி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related posts

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்