கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் பலி?… உடற்கூராய்வு முடிந்த பின்பே, உண்மை நிலவரம் தெரியவரும் என காவல்துறை விளக்கம்!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதனை மாவட்ட காவல்துறை மறுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இன்று காலை அங்குள்ள கருணாபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (46), சேகர் (55), பிரவீன் (29), மாயக்கண்ணன் (48), ஜெகதீஷ் (75) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பினர். சிறிது நேரத்தில் அனைவருக்கும் வயிற்றுவலி மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் 5 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

இந்நிலையில் 5 பேரும் கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் “கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு அருகே உள்ள கருணாபுரத்தைச் சேர்ந்த 5 நபர்கள் கள்ளச்சாராயம் அருந்தி இறந்துவிட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை விசாரணையில் உடற்கூராய்வு முடித்து அறிக்கை பெற்று உண்மை நிலவரத்தை தெரிவிக்கும் வரை இது போன்ற செய்திகளை நம்பி மக்கள் அச்சமடைய வேண்டாம்” என தெரிவித்துள்ளனர்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது