உலகளவில் 4 பேர் மட்டும் பாதிக்கப்படும் அரிய நோயினால் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பாதிப்பு: வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்; மருத்துவக் குழுவினருக்கு டீன் தேரணிராஜன் பாராட்டு

சென்னை: உலக அளவில் 4 பேர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ள அரிய வகை நோயினால் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பெண் பாதிக்கப்பட்ட நிலையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடித்து நேற்று அவர் வீடு திரும்பினார். மேலும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினரை ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் தேரணிராஜன் பாராட்டினார். சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: உலக அளவில் மிகவும் அரிய நோயான `பிரைமரி கைபர்பேரா தைராடிசம்’ என்ற நோயினால் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பெண் பாதிக்கப்பட்டார். உலகளவில் 4 பேர் மட்டும் இதுபோன்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்ப காலத்தில் அவருக்கு ஏற்பட்ட உபாதையின் காரணமாக பாண்டிச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை, ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர், நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை துறையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர் தளபதி தலைமையில் அமைந்துள்ள மருத்துவக் குழுவினர் முழுமையாக ஆய்வு செய்தபோது அவருக்கு `பிரைமரி கைபர்போரா தைராய்டிசம்’ என்று கூறக்கூடிய `போரா தைராய்டு வீக்கம்’ அடைந்துள்ளதை உறுதி செய்தனர். மேலும் அவருடைய ரத்தத்தை பரிசோதனை செய்தபோது கால்சியம் அளவு அதிகமாக இருந்தது. கால்சியம் அதிகம் சுரந்ததால் உடலில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தியது.

இதனால் அவரின் உயிருக்கு ஆபத்து இருந்தது. இவர் கர்ப்பிணியாக இருப்பதால் அதனுடைய பாதிப்பு சிசுவுக்கும் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தும் ஏற்படும் நிலை உருவானது. இந்நிலையில், நுட்பமாக ஆய்வு செய்து எந்த இடத்தில் பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்து அதனை அறுவை சிகிச்சை செய்து எடுத்தால் தான் தாய் மற்றும் சிசுவை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்து, பிறகு நுட்பமான முறையில் அறுவை சிகிச்சை செய்து பெண்ணை காப்பாற்றினர். இதையடுத்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் நேற்று நலமுடன் அப்பெண் வீடு திரும்பினார். இவ்வாறு டீன் தேரணிராஜன் கூறினார்.

Related posts

பீகாரில் 15 நாளில் 7-வது பாலம் இடிந்து விழுந்து விபத்து!!

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனின் தாயார் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

“நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்” தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி.! தமிழ்நாடு அரசு அறிவிப்பு