கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்; விசாரணைக்கு ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, கருணாபுரம், சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம், கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி விஷ சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 68 பேர் உயிரிழந்தனர். சிகிச்சையில் குணமடைந்து 161 பேர் நலமுடன் வீடு திரும்பினர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் பிரபல சாராய வியாபாரிகள் உள்பட 24 பேர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஒருநபர் ஆணைய ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் கடந்த மாதம் 3ம் தேதி விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினார். இம்மாதம் 2ம்தேதி வரை பல்வேறு கட்டங்களாக கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பதினரிடம் தொடர்ந்து விசாரணை நடந்தது. இதுவரை மொத்தம் 150 பேர்களிடம் ஒருநபர் ஆணையம் விசாரணையை நடத்தி முடித்துள்ளது. பல்வேறு காரணங்களால் விசாரணைக்கு ஆஜராகாத 11 பேருக்கு மீண்டும் கள்ளக்குறிச்சி போலீஸ் மூலம் சம்மன் அனுப்ப ஒரு நபர் ஆணையம் முடிவு செய்துள்ளது.

 

Related posts

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் இலங்கை.. சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக தொடர் நடவடிக்கை!!

முஸ்லிம்களின் உரிமைகள் மறுப்பு; இந்தியாவை விமர்சித்த ஈரான் தலைவர்: வெளியுறவு துறை கடும் கண்டனம்

டெல்லியின் ஒரே முதல்வர் கெஜ்ரிவால்தான் : புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி பேட்டி