கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்; பெட்ரோல் பங்க்கில் 2 ஆயிரம் லிட்டர் மெத்தனாலை பதுக்கி வைத்த மாதேஷ்: போலீஸ் விசாரணையில் அம்பலம்: பங்க்கிற்கு சீல் வைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான புதுச்சேரி மாதேஷ், 2 ஆயிரம் லிட்டர் மெத்தனாலை பண்ருட்டி பெட்ரோல் பங்க் டேங்கில் பதுக்கி வைத்தது அம்பலமாகி உள்ளது. அந்த பங்க்கிற்கு சீல் வைத்த போலீசார் மெத்தனால் சாம்பிள் எடுத்து பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி உள்ளனர். கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷசாராயம் குடித்த விவகாரத்தில் இதுவரை 229 பேர் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். சிகிச்சை பலனின்றி 65 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான புதுச்சேரி மாதேஷ், கள்ளக்குறிச்சி சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், சின்னதுரை உள்பட 21 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் முக்கிய குற்றவாளி புதுவை மாதேஷ், சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உள்பட 11 பேரை சிபிசிஐடி போலீசார் காவல் விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தினர். 3 நாட்கள் விசாரணை முடிந்ததும் அவர்கள் கடலூர் மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான புதுச்சேரி மாதேஷ் சிபிசிஐடி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் திடுக்கிடும் தகவல் அம்பலமானது. அதன் விவரம் வருமாறு: கடலூர் மாவட்டம் பண்ருட்டி வீரப்பெருமாநல்லூர் என்ற ஊரில் பழனிவேல் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கை 3 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் நடத்த மாதேஷ் அனுமதி பெற்றிருந்தது தெரியவந்தது. மாதேஷ் சென்னையில் இருந்து வாங்கிய மெத்தனாலை கள்ளக்குறிச்சிக்கு அனுப்பிவிட்டு மீதமுள்ள 2 ஆயிரம் லிட்டர் மெத்தனாலை இந்த பெட்ரோல் பங்க்கில் தரைக்கு அடியில் உள்ள டேங்கில் ரகசியமாக பதுக்கி வைத்திருந்த விஷயமும் வெளிச்சத்துக்கு வந்தது.

இதை தொடர்ந்து சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் வீரப்பெருமாநல்லூரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு நேற்று மாலை அதிரடியாக சென்று, அங்கு ஆய்வு செய்தனர்.
அப்போது பெட்ரோல் டேங்கில் மெத்தனால் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த மெத்தனாலை சிபிசிஐடி போலீசார் சாம்பிள் எடுத்து பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையொட்டி சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்கிற்கு போலீசார் சீல் வைத்தனர். மேலும் அந்த பெட்ரோல் பங்க் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பெட்ரோல் பங்க் உரிமையாளர் பழனிவேலுக்கு சம்மன் அனுப்பி அவரை விசாரணைக்கு அழைக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

 

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு புதுச்சேரியில் தொடங்கியது

ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பு

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டர்