காளிகாம்பாள் கோயில் முன்னாள் அறங்காவலருக்கு கொலை மிரட்டல்: தலைமை அர்ச்சகர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக, பேசிய முன்னாள் அறங்காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்தவர் விஸ்வநாதன் (58). இவர் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பிராட்வே பகுதியில் உள்ள பிரபல காளிகாம்பாள் கோயில் அறங்காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதற்கிடையே காளிகாம்பாள் கோயிலின் தலைமை அர்ச்சகராக பணியாற்றி வரும் காளிதாஸ், கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தங்க நகைகள் மற்றும் பணத்தை அவரே எடுத்து செல்வதாக கோயிலில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளிடம் விஸ்வநாதன் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் கோயில் தலைமை அர்ச்சகர் காளிதாசுக்கும், முன்னாள் அறக்காவலர் விஸ்வநாதனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அதேநேரம் காளிகாம்பாள் கோயிலுக்கு வரும் பக்கதர்கள் அளிக்கும் காணிக்கை தொடர்பாக பொது வெளியில் பேட்டி கொடுக்க விஸ்வநாதன் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் காளிதாசுக்கு தெரியவந்தது. இந்நிலையில் விஸ்வநாதன் கடந்த 15ம் தேதி பணி முடிந்து இரவு 8.30 மணிக்கு தனது பைக்கில் அண்ணா சாலை மன்றோ சிலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் பின் தொடர்ந்து வந்த 4 பேர், விஸ்வநாதனை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசியும், கோயில் அறங்காவலர் காளிதாசுக்கு எதிராக பேட்டி அளித்ததால் உன்னை கொலை செய்துவிடுவோம் என, கத்தியை காட்டி மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த விஸ்வநாதன் சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரித்தபோது, காளிகாம்பாள் முன்னாள் அறங்காவலர் விஸ்வநாதனை தற்போது காளிகாம்பாள் தலைமை அர்ச்சகராக உள்ள காளிதாஸ் தனது ஆதர்வாளர்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, திருவல்லிக்கேணி போலீசார் காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது ஐபிசி 294(பி), 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காளிகாம்பாள் கோயிலுக்கு வந்த நடிகைக்கு தீர்த்தத்தல் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியின் சிறிய தந்தை தான் காளிதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து