நீதியை நிலைநாட்டிய மனுநீதி சோழனின் கல்தேர் மண்டபம் ₹50 லட்சத்தில் சீரமைப்பு

*தூண்கள் அமைத்து பணிகள் விறு, விறுப்பு

*வரலாறு பாதுகாக்கப்படுவதாக பாராட்டு

திருவாரூர் திருவாரூரில் நீதியை நிலைநாட்டிய மனுநீதி சோழனின் கல்தேர் மண்டபம் ரூ.50 லட்சத்தில் சீரமைக்கப்படுகிறது. இதற்காக பில்லர் போட்டு பணிகள் விறு, விறுப்பு நடைபெற்று வருகிறது. வரலாறு பாதுகாக்க ப்படுவதாக பொதுமக்கள் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.திருவாரூரில் நீதியை நிலைநாட்டிய மனுநீதி சோழனின் கல்தேர் மண்டபமானது ரூ.50 லட்சம் மதிப்பில் அறநிலைய துறை சார்பில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருவாரூர் என்றாலே வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ சுவாமி கோயிலும், உலக பிரசித்தி பெற்ற ஆழி தேரோட்டமும்தான் நினைவுக்கு வரும். அதுமட்டுமின்றி திமுகவின் தலைவராகவும், தமிழகத்தின் 5 முறை முதலமைச்சர் பதவி வகித்தவரும், சமூகநீதி காவலராகவும் வாழ்ந்து மறைந்த கருணாநிதி படித்து, வளர்ந்த ஊராகும். இத்தகைய பெருமைகள் கொண்ட திருவாரூரில் சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அனபாய சோழன் என்ற மன்னர் ஒருவர் ஆட்சி நடத்திய போது அவரது ஒரே மகனான வீதிவிடங்கன் திருவாரூர் நகரில் தேரை ஓட்டிச்சென்றார்.

அப்போது அந்த தேரில் பசுவின் கன்று ஒன்று அடிபட்டு இறந்து விட்டது. இதற்கு நீதி கேட்டு கன்றுவின் தாய் பசுவானது மன்னரின் அரண்மனைக்குச் சென்று ஆராய்ச்சி மணியினை பிடித்து இழுத்தது. அப்போது சத்தம் கேட்டு வெளியில் வந்த மன்னரின் மந்திரிகளில் ஒருவர் நடந்த சம்பவம் பற்றி தெரிந்து கொள்ளவே, எதற்காக மணி அடித்தது என மந்திரியிடம் மன்னர் கேட்டுள்ளார். அப்போது அந்த மந்திரி தயங்கவே உண்மையை கூறுமாறு மன்னர் கட்டளையிட்டுள்ளார். அந்த மந்திரி, மன்னா தாங்கள் மகன் ஓட்டிச் சென்ற தேரில் பசுவின் கன்று அடிபட்டு இறந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

உடனடியாக தனது மந்திரிகளில் ஒருவரை அழை த்து அதே தேரை கொண்டு தனது மகனை தேரில் ஏற்றி கொன்றுவிடுமாறு மன்னர் உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவினை நிறைவேற்றுவதற்கு மந்திரிகள் அனைவரும் தயங்கிய நிலை யில், தானே அந்த தேரை ஓட்டி சென்று பசுவின் கன்று இறந்த அதே இடத்தில் மகன் வீதிவிடங்கனை படுக்க வைத்து அவர் மீது தேரை ஏற்றி கொன்றதாக வரலாறு உள்ளது. இதனால் அனபாயசோழன் என்ற பெயர் கொண்ட அந்த மன்னனுக்கு மனுநீதி சோழன் என்ற பட்டத்தை பொதுமக்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த மனுநீதி சோழன் வரலாறு குறித்து புகழ்பெற்ற தியாகராஜ சுவாமி கோயிலின் விட்ட வாசல் எதிரே கல்தேர் மண்டபம் ஒன்று பல நூற்றாண்டு காலமாக இருந்து வருகிறது. இந்த மண்டபத்தில் இருந்து வரும் கல்தேரில் மனுநீதி சோழன் தேரை ஓட்டுவது போன்றும், அதன் சக்கரத்தில் வீதிவிடங்கன் சிக்கி இறப்பது போன்று சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்தேர் மண்டபத்தை தினந்தோறும் உள்ளூர் பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வருவோரும் இதனை பார்வையிட்டு மனுநீதி சோழன் வரலாறு குறித்து அறிந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கல்தேர் மற்றும் மண்டபமானது சேதமடைந்து வருவதை அறிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ரூ.50 லட்சத்தில் பழமை மாறாமல் சீரமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி அடிக்கல் நாட்டு பணியானது அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மூலம் நடத்தப்ப ட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது குழி தோண்டப்பட்டு பில்லர் அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.வரலாற்றை பாதுகாக்கும் வகையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிக்கு தமிழக அரசுக்கும், முதல்வருக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related posts

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

ஆடி மாத அம்மன் கோயில் திருவிழாவுக்காக மண்பானை பொருட்கள் தயாரிப்பு பணி தீவிரம்

பொன்னை அருகே துணிகரம் அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை திருட்டு