கலாஷேத்ராவின் மற்றொரு பேராசிரியர் மீது ரஷ்யா முன்னாள் மாணவி பரபரப்பு புகார்: அட்ஜெஸ்மென்ட் செய்யாவிட்டால் மார்க் குறைப்பேன் என மிரட்டி சீரழிப்பு

சென்னை: ‘அட்ஜெஸ்மென்ட் செய்யவில்லை என்றால், தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வழங்குவேன்’ என்று மிரட்டி தன்னை சீரழித்ததாக கலாஷேத்ராவில் படித்த ரஷ்யாவின் முன்னாள் மாணவி ஒருவர் மற்றொரு பேராசிரியர் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்திய கலைகளான நாட்டியம், நடனம் உள்பட பல்வேறு கலைகளை கற்று வருகின்றனர்.

இந்நிலையில், கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் உட்பட 4 பேர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக முன்னாள் மாணவி ஒருவர் புகார் அளித்தார்.இந்நிலையில் கேரளாவை சேர்ந்த பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி ஒருவர் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் தோழி வீட்டில் தலைமறைவாக இருந்த கலாஷேத்ரா கல்லூரியின் பேராசிரியர் ஹரிபத்மனை போலீசார் கைது செய்தனர்.

அதைதொடர்ந்து, கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் போன்று உதவி நடன கலைஞர்களான உள்ள சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகியோருக்கு எதிராக வலுவான ஆதாரங்களை மாநில மகளிர் ஆணையத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்துள்ளதால், விரைவில் 3 உதவி நடன கலைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பாலியல் தொந்தரவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவிகளுக்கு ஆதரவாக கலாஷேத்ரா கல்லூரியில் பணியாற்றி வரும் நிர்மலா மற்றும் நந்தினி ஆகிய 2 பேராசிரியைகளுக்கு எதிராக கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கலாஷேத்ரா கல்லூரியில் படித்த ரஷ்யா நாட்டை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்கு இ-மெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளார். அந்த புகாரில், ‘பரத நாட்டியத்தின் மீது உள்ள ஈர்ப்பால் நான், கலாஷேத்ரா கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரி விடுதியில் தங்கி படித்தேன். கல்லூரி பேராசிரியர்களுக்கும் கல்லூரி வளாகத்திலேயே வீடுகள் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. கல்லூரி முடிந்ததும் நான் விடுதிக்கு செல்வேன். நான் கல்லூரியில் சேர்ந்த 6 மாதத்திலேயே எனக்கு பல வகையில் பாலியல் தொந்தரவு கொடுத்தார். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை.

ஒரு நாள் எனது பேராசிரியர், நான் விடுதியில் இருக்கும் போது போன் செய்து பேசினார். அப்போது, அவர், ‘தன்னை அட்ஜெஸ்மெட் செய்யவில்லை என்றால்….. தேர்வின் போது, உனது ஒப்பனைகள் சரியாக இல்லை என்று 30 மதிப்பெண்கள் தான் வழங்குவேன். நீ ரஷ்யாவில் இருந்து இவ்வளவு செலவு செய்து படித்தும் எந்த பலனும் இல்லாமல் போய் விடும் என்று மிரட்டினார். அதன் பிறகு கல்லூரியில் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. அதன் பிறகு என்னை தனியாக அழைத்து உனது நடன நிகழ்ச்சியை அரங்கேற்ற நான் உதவி செய்கிறேன் என்று கூறி, சிறப்பு பயிற்சி வழங்குகிறேன் என்றுஅவரது வீட்டிற்கு அழைத்தார்.

விடுதியும், பேராசிரியர் வீடும் கல்லூரி வளாகத்தில் இருப்பதால் நான் அன்று இரவு 8 மணிக்கு அவரது வீட்டிற்கு சென்றேன். அங்கு சென்ற எனக்கு நடன கலையில் பல நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு அவர், தன்னை பாலுணர்வு தூண்டும் வகையில் உடலில் பல பாகங்களை தொட்டு என்னை, அவர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, என் விருப்பத்திற்கு எதிராக பாலியல் பலாத்காரம் செய்தார். இதை நான் வெளியே சொன்னால் கல்லூரி நிர்வாகத்திடம் நீ ஒழுக்கமற்ற நிலையில் வகுப்பில் நடந்து கொள்வதாக கூறி கல்லூரியில் இருந்து வெளியே அனுப்பிவிடுவதாக மிரட்டினார்.

இதுபோல் எனது கல்லூரி காலங்களில் பல முறை என்னை பாலியல் தொந்தரவு செய்தார். அதன் பிறகு எனக்கு 65 முதல் 75 மதிப்புகள் அளித்தார். வகுப்பில் நான் முதல் 5 இடத்தில் இருந்தேன். தற்போது நான் புகார் அளிக்க காரணம், நான் வெளிநாட்டு மாணவி என்பதால் அப்போது எனக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்ல முடியவில்லை. தற்போது கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் பாலியல் வழக்கில் கைது சய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் சென்னையில் உள்ள சக மாணவிகள் தன்னிடம் தொலைபேசியில் பகிர்ந்தனர். எனவே அவரை போன்று பல பேராசிரியர்கள், என்னை போல், பல மாணவிகளுக்கு மதிப்பெண்களை ஆயுதமாக வைத்து கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். அந்த பேராசிரியர் இன்றும் கலாஷேத்ராவில் மூத்த பேராசிரியராக சுதந்திரமாக பணியாற்றி வருகிறார். எனவே அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான ஆதாரங்கள் விசாரணையின் போது அளிக்கிறேன்’. இவ்வாறு இ-மெயிலில் அவர் புகார் அளித்துள்ளார்.

  • கலாஷேத்ராவை கைப்பற்ற பாலியல் பிரச்னை
    போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கலாஷேத்ரா முன்னாள் மாணவியும், நடிகையுமான அபிராமி ேநற்று புகார் ஒன்று அளித்தார். அதன்பிறகு நிருபர்களிடம் நடிகை அபிராமி பேசியதாவது: ‘ நான் கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 2015 முதல் 2019 வரை பயின்றேன். நான் படிக்கும் போது இது போன்ற பாலியல் துன்புறுத்தல் எதுவும் கிடையாது. நான் கலாஷேத்ரா விவகாரம் பற்றி பேசியதற்கு நான் பப்ளிசிட்டி பெறுவதற்காக பேசுகிறேன் என கூறுகிறார்கள். நிர்மலா என்ற பேராசிரியை எனது தோழி மூலமாக தொலைபேசியில் அழைத்து கல்லூரிக்கு எதிராக செயல்படுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன்.

அதன்பிறகு நிம்மி என்ற பேராசிரியை நான் கோயம்புத்தூர் சென்று, திரும்பும் போது தொலைபேசி மூலம் அழைத்தார். பேராசிரியர் ஹரி பத்மன் இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட வாய்ப்பில்லை. பேராசிரியர் ஹரி பத்மன் எனக்கு பாடம் சொல்லித் தந்த ஆசிரியர். ஹரி பத்மன் ஒரு நல்ல ஆசிரியர். கல்லூரியின் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்காக நிர்மலா ராஜன், நந்தினி ஆகிய இரண்டு பேராசிரியைகள் மாணவர்களை தூண்டிவிட்டு இதுபோன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் கலாஷேத்ரா நிர்வாகத்தை கையகப்படுத்துவது தொடர்பாக சிலர் இது போன்ற பிரச்னைகளில் ஈடுபட்டுள்ளனர். என்னை தொடர்பு கொண்டு பேசிய பேராசிரியைகள் குறித்த விபரங்களை நான் கமிஷனர் அலுவலகத்தில் புகாராக அளித்துள்ளேன்’. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

அக்-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!