கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பங்களை சரிபார்க்கும் களப்பணியாளர்களுக்கு பயிற்சி

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்த விண்ணப்பங்களை சரிபார்க்கும் வடக்கு மண்டல களப்பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், தலைமையில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 1,428 நியாய விலை கடைகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப்பதிவு முகாம்கள் முதற்கட்டமாக 704 நியாயவிலைக் கடைகளில் 24.7.2023 முதல் 4.8.2023 வரையிலும், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 724 நியாயவிலைக் கடைகளில் 5.8.2023 முதல் 16.8.2023 வரையிலும், 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற கணக்கில் 3,511 சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

மேலும், மேற்படி சிறப்பு முகாம்களில் கலந்து கொள்ளாமல் விடுபட்டவர்களுக்கென 1,428 நியாயவிலை கடைகளிலும் 18.8.2023 முதல் 20.8.2023 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு முகாம்களுக்கென 4,931 விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்கள், 1,428 உதவி தன்னார்வலர்கள் மற்றும் 2,856 சிறப்பு முகாம் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பாக விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டன. மூன்று முகாம்களிலும் மொத்தமாக 9,58,807 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தற்போது, பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை களஆய்வு செய்ய ஒரு நியாயவிலைக் கடைக்கு ஒரு களஆய்வு பணியாளர் என்ற விதத்தில் 1,428 களஆய்வு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு களஆய்வு பணி செயலியில் எவ்வாறு பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது குறித்து உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளன. இதற்கான களஆய்வு பணியானது 26.8.2023 அன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வடக்கு மண்டல களஆய்வு பணியாளர்களுக்கான பயிற்சி முகாம், நேற்று நடந்தது. இதில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார்.

களஆய்வு பணியாளர்களின் ஆய்வு பணியினை சரிபார்க்க களஆய்வு சரிபார்ப்பு அலுவலர்களாக கூடுதல் ஆணையர்/ இணைஆணையர்/ துணைஆணையர், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டார துணை ஆணையர், மண்டல அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், வருவாய் கோட்டாட்சியர், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு