கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சென்னையில் ஒரே நாளில் 5,25,000 விண்ணப்பங்கள்: வீடுவீடாக சென்று விநியோகம்

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக 5,25,000 விண்ணப்பங்கள் வீடு வீடாக சென்று குடும்ப தலைவிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கான விண்ணப்ப பதிவு மூன்று கட்டமாக சென்னை மாநகராட்சியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 1428 நியாய விலைக் கடைகளில் முதல்கட்டமாக 703 நியாயவிலைக் கடைகளுக்கு 24-7-23 முதல் 4-8-23 வரையிலும், 2ம் கட்டமாக 725 நியாயவிலைக் கடைகளுக்கு 5-8-23 முதல் 16-8-23 வரையிலும், மூன்றாம் கட்டமாக விடுபட்டவர்களுக்கு 17-8-23 முதல் 28-8-23 வரையிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மேலும், 2266 பயோ மெட்ரிக் கருவிகள் தேவையான அளவில் ஏற்பாடு ஏற்பட்டுள்ளன.

முதல்கட்டமாக 703 நியாயவிலைக் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற கணக்கில் 1727 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று தொடங்கப்பட்டது. மேலும், சிறப்பு முகாம்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு 1727 தன்னார்வலர்கள், 703 உதவி தன்னார்வலர்கள் மற்றும் 703 சிறப்பு முகாம் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை சார்பில் கூட்ட நெரிசல் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளன, இதற்கென 1515 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், 154 நகரும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, நேற்று முன்தினம் மட்டும் 5,25,000 விண்ணப்பங்கள் வீடுவீடாக சென்று குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேற்படி பணிகளை கண்காணிக்க மண்டல வாரியாக 15 மண்டலங்களுக்கும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

Related posts

எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு நிதி ஒதுக்காததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்