கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: இதுவரை 1.48 கோடி விண்ணப்பங்கள்… விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு 19, 20ம் தேதிகளில் சிறப்பு முகாம்!!

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ்​ இதுவரை ஒரு கோடியே 48 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை தமிழக அரசின் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15ம்தேதி தொடங்கி வைக்கிறார். இதைத்தொர்ந்து தமிழகம் முழுவதும் ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு முதல் கட்டமாக ரூ.1000 வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 24ம் தேதி தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் தொடங்கி வைத்தார். விண்ணப்பப் பதிவு முகாம்களை இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20,765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு கடந்த 24ம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடந்தன.இதில், 88 லட்சத்து 034 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 5ம் தேதி தொடங்கி 2ம் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம்கள் வரும் 16ம் தேதி வரை நடைபெற்றுள்ளது. 2ம் கட்ட முகாம்களில் இதுவரை 59 லட்சத்து 086 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.2ம் கட்டமாக நடைபெறும் முகாம்களில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை தேவை ஏற்படின் சரிபார்க்க கள ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அப்போது விண்ணப்பதாரர்கள் கள ஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு உரிய தகவல்களை அளித்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!