இல்லத்தரசிகளுக்கு தீபாவளி பரிசு.. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கில் இன்று முதல் ரூ. 1000 டெபாசிட்!!

சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கலைஞர் மகளிர் திட்ட பயனாளிகளின் ரூ.1000 ஐ வரவு வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பெண்கள் கடந்த இரண்டு மாதமாக தலா ரூ.1000 பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக விண்ணப்பித்து, அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால், நியாயமான காரணம் இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதை ஏற்று, தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25ம் தேதி வரை சுமார் 11.85 லட்சம் பேர் ரூ.1000 கேட்டு மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களை தமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரிகள் களஆய்வு செய்தனர். தொலைபேசி மூலமாகவும், நேரிலும் சென்று ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து மேல்முறையீடு செய்தவர்களில் 8 லட்சம் பேர் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பும் பணி தொடங்கியது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டாலும், அதற்கான காரணம் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

இதனிடையே முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை சென்னை கலைவாணர் அரங்கில் மகளிர் உரிமைத் தொகை 2ம் கட்டத்தை தொடக்கி வைக்க உள்ளார். தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு ஏடிஎம் கார்டுகளையும் வழங்க உள்ளார் . நாளை முதல் அனைவரின் வங்கிக்கணக்கிலும் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இன்றைய தினமே 1000 ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. அதற்கான எஸ்எம்எஸ் செல்போன் எண்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

Related posts

ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த 2 பேர் கைது!!

இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்தியா அறிவுறுத்தல்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..!