வறட்சியைத் தாங்கி வளரும் நெல்ரகம் காட்டுயானம்!

நெல் பயிரிடும் விவசாயிகள் மழை வந்துவிட்டாலும், மழை இல்லாமல் போனாலும் அச்சம் கொள்ள வேண்டி இருக்கிறது. கனமழை பெய்து நீர் வெளியேறாமல் நிலத்தில் தேங்கிவிட்டால் பயிர்கள் அழுகி பெரும் சேதத்தை விளைவித்து விடுகிறது. மழை இல்லாவிட்டால் பயிர் வளர போதிய நீர் இருக்காது. இதற்குத்தான் எவ்வளவு வெள்ள நீர் வந்தாலும், மழையின்றி வறட்சி நிலவினாலும், சூழலைத் தாங்கி நின்று விளைச்சல் கொடுக்கும் நெல் ரகங்களை அன்றைய காலத்தில் முன்னோர் பயிர் செய்தனர். இதன் மகத்துவம் குறித்து அறிந்த பலர் தற்போது அதுபோன்ற பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடித்தேடி பயிர் செய்கிறார்கள். நீங்களும் அத்தகைய ரகம் ஒன்றை பயிர் செய்ய வேண்டும் என நினைத்தால் காட்டுயானம் சரியான தேர்வு.

இது வறண்ட நிலத்தில் நீரே இல்லாத சூழ்நிலையிலும் வளரக்கூடிய நெல் ரகம். பாரம்பரிய நெல் ரகங்களிலியே காட்டுயானத்திற்கு தனித்துவம் இருக்கிறது. இந்த ரகம் காட்டுப் பகுதிகளில், காட்டுச்செடியாகவே வளரும் தன்மை கொண்டது. பெரிதாக, தடிமனாக, மோட்டா ரகமாக சிவப்பு வண்ணத்தில் இருக்கும். நன்கு வளர்ந்த ஒரு நபர் தரையில் நின்று மரத்தில் பழம் பறிப்பதைப் போல்தான் இதன் கதிரைத் தொட முடியும். `காட்டுயானம் விளைந்த காட்டில் யானை நின்றாலும் தெரியாது’ என்ற சொல் வழக்கு ஒன்று இருக்கிறது. இதன் தண்டு தடிமனாகவும் பயிர் சற்று அகலமாகவும் வளரும் என்பதால் இதை சரா சரியாக ஒரு அடி இடைவெளியில் நட வேண்டியது அவசியம். எனவே, நேரடி விதைப்பை விடவும் நாற்றங்கால் அமைத்து முளைக்கச் செய்த பின் நடவு செய்வதுதான் மிகச்சிறந்த முறை.

ஒரு ஏக்கர் காட்டுயானம் பயிரிட சராசரியாக ஆறு கிலோ வரை விதை நெல் தேவைப்படும். நெல்லை விதைநேர்த்தி செய்தபின் பிளாஸ்டிக் பையில் சுமார் 10 முதல் 29 அடி அகலத்திற்கு நாற்றங்கால் அமைக்க வேண்டும். அதாவது பிளாஸ்டிக் பையில் மண்ணைத் தூவி அதன் மேற்புறம் நன்கு மட்கிய தொழுவுரம் இட வேண்டும். அதன் மீது மீண்டும் மண்ணைத் தூவி நீர்பாய்ச்சி விதையை தூவ வேண்டும். ஈரப்பதம் தங்கியிருக்க அதன் மீது வைக்கோல் தூவ வேண்டும். காட்டுயானம் விதையைச் சாதாரணமாக தூவினாலே நன்கு முளைத்துவிடும். இப்படி முறையாகப் பராமரித்தால் இன்னும் சிறப்பாக வளரும். நாற்றங்காலில் சுமாராக தண்ணீர் தெளித்தாலே போதும். இப்படி பராமரித்து வந்தால் 12 முதல் 18 நாட்களுக்குள் முளைப்புத்திறன் பெற்று வளர்ந்துவிடும்.

பிறகு நாற்றைப் பறித்து, பண்படுத்திய வயலில் நடவு செய்யலாம். நடவு செய்யும் முன்பு வயலை நன்றாக இரண்டு முறை கோடை உழவு போல் உழுதுவிட்டு பசுந்தாள் உரமிட்டு, அவை நன்கு வளர்ந்த பின் மடக்கி உழ வேண்டும். சில நாட்கள் நீர் பாய்ச்சினால் அவை மட்கிவிடும். பிறகு, மீண்டும் ஒருமுறை உழுதுவிட்டு ஒரு நெல் ஒரு நாற்று முறையில் நடவு செய்யலாம். நடவு செய்யும்போது விதைப்பு நேராக இருப்பதற்காக கயிறு பிடித்து நேர் செய்து நடுவது நல்லது. நடவு முடிந்த பிறகு ஒரு 10 நாட்களுக்கு பரவலாகத் தண்ணீர் கட்டி நிற்கும்படியாக நீர் பாய்ச்ச வேண்டும். இதனால், தேவையற்ற களைகள் அழுகிவிடும். அதன்பிறகு தண்ணீர் பெரிதாக தேவைப்படாது. பொதுவாக, காய்ச்சலும் பாய்ச்சலுமாக பராமரித்தாலே போதுமானது. இதன் பயிர் வேகமாக வளரும். மற்ற பயிர்கள் மூன்றரை மாதத்தில் எட்டும் உயரத்தை இது ஒரே மாதத்தில் எட்டிவிடும். பயிரிட்ட 25வது நாள் வேப்பம்புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, எள்ளுப் புண்ணாக்கு, புங்கம் புண்ணாக்கு போன்றவை கலந்த கலப்பு புண்ணாக்கு மட்டும் கொடுத்தால் போதும். அதன்பிறகு 10 லிட்டர் கோமியம், 5 கிலோ சாணம், 2 கிலோ வெல்லம் ஆகியவற்றை 10 லிட்டர் நீரில் கலந்து ஜீவாமிர்தம் தயாரித்து, அதை நீரில் கரைத்து காலை, மாலை தெளிக்கலாம். 20வது நாள் ஒரே ஒரு முறை களை எடுத்தால் போதுமானது.

காட்டுயானத்துக்கு அளவுக்கு அதிகமாக உரமிட்டால் கதிர்கள் நன்கு தடிமனாகும்போது பாரம் தாங்காமல் படுத்துவிடும் சாத்தியம் இருக்கிறது. அதனால் நில வளத்துக்கு ஏற்ப ஊட்டம் தர வேண்டியது அவசியம். சராசரியாக இது 160 நாளில் இருந்து 180 நாட்களுக்குள் அறுவடைக்குத் தயாராகிவிடும். காட்டு யானத்திலிருந்து நன்கு அடர்த்தியான ஊட்டச்சத்து மிகுந்த வைக்கோல் கிடைக்கும். குறைவான நீர்வளம், நிலவளம் உள்ள பகுதிகளில் அதிகப் பராமரிப்பின்றி பயிரிட காட்டுயானம் மிகச் சிறந்த பயிர். கோடை காலத்திலும் பயிரிட ஏற்றது.

*இதில் உள்ள சிறப்பான நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதோடு வயிற்றில் உள்ள புண்களை ஆற்றுகிறது. புற்று செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. மலக்குடல் புற்றுநோய் உள்ளவர்களுக்கு காட்டுயானம் மிகச்சிறந்த பலன் தரும்.

*காட்டு யானத்தின் ஊட்டச்சத்துக்கள் எலும்பு மஜ்ஜைகளை வலுவாக்குகின்றன. வளரும் குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்களைக் கொண்டிருக்கின்றன.

Related posts

திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி